கல்யாண பெண்ணை அடித்து இழுத்துச் சென்ற உறவினர்கள்..! காலில் விழுந்த மாப்பிள்ளை

0 14101

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பத்திர பதிவு அலுவலகத்திற்கு திருமணத்தை பதிவு செய்யவந்த காதல் ஜோடிகளை அடித்து பிரித்து அழைத்துச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்ணின் தந்தைக்கு மரியாதை தர மறுத்த காதலனால் நிகழ்ந்த களேபரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஏகே மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் , இவர் சந்தை கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சத்தியவாணி என்பவரை காதலித்து வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு கார்த்திக் அந்த பெண்ணை கடத்தி சென்றதாக ஊத்தங்கரை காவல்நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். விசாரணையில் இருவரும் காதலித்து வீட்டை விட்டு சென்றது தெரியவந்ததால், சமாதான பேச்சுவார்த்தை நடந்தி உறவினர்கள் முன்பு அங்குள்ள கோவிலில் வைத்து கார்த்திக்கிற்கும் சத்தியவாணிக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்தை பதிவு செய்வதற்காக வியாழக்கிழமை பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் இணைந்து ஊத்தங்கரை பத்திர பதிவு அலுவலகத்திற்கு கும்பலாக சென்றனர். தனது ஒரே மகள் , தன்னுடைய உணர்வை மதிக்காமல் , அவளது விருப்பபடி காதல் திருமணம் செய்து கொள்கிறாளே என்ற கோபத்துடன் இருந்த மாமனாரை , சாட்சி கையெழுத்து போட வருமாறு மாப்பிள்ளை கார்த்தி அழைத்தார். அதற்கு மாமனார் வர மறுத்ததாக கூறப்படுகின்றது.

இதனால் ஆவேசமான மாப்பிள்ளை, மாமனாரை மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து பெண்ணின் தகப்பனார் வாம்மா நம்ம வீட்டிற்கு செல்லலாம் என கூறி தனது மகளை வெளியே அழைத்து சென்றுவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணமகன் வீட்டார் சண்டையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து மாப்பிள்ளையையும் அவரது உறவினர்களையும் சரமாரியாக தாக்க தொடங்கினர்

அவனுடன் நடந்த திருமணத்தை மறந்து விடும் படி கூறி கல்யாண பெண்ணை, காதலனிடம் இருந்து பிரித்து, அடித்து இழுத்துச்சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

தனது மரியாதை குறைவான பேச்சால் , காதலி தனக்கு கிடைக்கமாட்டாள் என்ற நிலை ஏற்பட்டதை தாமதமாக உணர்ந்த கார்த்திக், பெண் வீட்டாரை சமாதானம் செய்ததோடு, மாமனார் காலில் கும்பிட்டு விழுந்து மன்னிப்பு கேட்டதால் இந்த களேபாரம் முடிவுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து இவர்களது திருமணம் முறைப்படி சாட்சி கையெழுத்துடன் பதிவு செய்யப்பட்டது. கலாட்ட கல்யாணம் இறுதியில் கலகலப்பாக முடிந்ததால், மணமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments