7ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை.. கம்பி இல்லா ஜன்னல் விபரீதம்.. எமனாக மாறிய விளையாட்டு..!

0 3713

சென்னையில், அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து கம்பி இல்லா ஜன்னல் வழியாக 3 வயது குழந்தை, தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளுடன் மாடி வீட்டில் வசிக்கும் பெற்றோர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

ஓட்டேரி நார்த் டவுன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் வசித்து வருபவர் தீபேஷ். இவரது சகோதரி வினிதா. கணவனை இழந்த வினிதா தனது 11 வயது மகன் மோனிஸ் மற்றும் 3 வயது மகள் கவாஷியுடன் கடந்த ஒரு வருடமாக சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை காலை குழந்தை கவாஷி வீட்டின் ஹாலில் ஜன்னலோரம் போடப்பட்டிருந்த ஷோபாவில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.4 அடி அகலம் கொண்ட அந்த ஜன்னலில், இரும்பு கம்பிகள் இல்லாமல் ஸ்லைடிங் கண்ணாடி டோர் மட்டுமே போடப்பட்டிருந்தது.

குழந்தையின் தாய், பாட்டி உள்ளிட்ட அனைவரும் ஷோபாவுக்கு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. விளையாட்டுப் போக்கில் ஷோபா மீது ஏறிய குழந்தை, அந்த ஜன்னலை திறந்து கீழே எட்டிப்பார்த்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன தாயும், பாட்டியும் கூச்சலிட்டனர். தவறி விழுந்து படுகாயமடைந்த குழந்தையை வினிதா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற ஓட்டேரி போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் எந்த வீட்டிலுமே ஜன்னலில் இரும்பு கம்பிகள் அமைக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், ஷோபா மீது ஏறி குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததை கூட கவனிக்காமல் அவரது தாய் பேசிக் கொண்டிருந்ததால் இந்த விபரீதம் நேர்ந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு ஜன்னல்களில் இரும்பு கம்பிகள் இல்லை என்றாலும், குழந்தைகளை வைத்திருப்பவர்கள் பாதுகாப்பு கருதி ஜன்னல்களில் கம்பிகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென போலீசார் அறிவுறுத்து கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments