கலாச்சார பன்முகத்தன்மையே இந்திய சமூகத்தின் பலம் - பிரதமர் மோடி

கலாச்சார பன்முகத்தன்மையே இந்திய சமூகத்தின் பலம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டென்மார்க்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடிக்கு அந்நாட்டு ராணி விருந்து அளித்து கவுரவித்தார்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய மக்களின் அமைதியான மற்றும் கடின உழைப்பைப் பாராட்டினார்.
உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையே இந்திய சமூகத்தின் பலம் என கூறிய பிரதமர் மோடி, வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும், கலாச்சாரத்தால் இந்தியர்களாகத் திகழ்கின்றனர் என்றார்.
கொரோனாவால் அனைவரின் வாழ்கை முறையும் மெய்நிகர் முறைக்குள் நீண்ட நாட்கள் அடைபட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். டென்மார்க் பிரதமர் கடந்த ஆண்டு இந்தியா வந்ததையும் மோடி குறிப்பிட்டுப் பேசினார்.
இந்தியர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும், அந்நாட்டை முன்னேற்றும் பணியில் முக்கிய பங்களிப்பதாகவும், உலக தலைவர்களை தாம் சந்திக்கும் போதெல்லாம் இதுபற்றி குறிப்பிடுவதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடியும் மேளம் அடித்து உற்சாகப்படுத்தினார்.
டென்மார்க் ராணி இரண்டாம் மார்கரெத்தா, பிரதமர் மோடிக்கு விருந்து அளித்து கவுரவித்தார். முன்னதாக இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Comments