செயின் பறிக்க ஜோடியா போனீங்கல்ல, இப்ப ஒன்னாவே ஜெயிலுக்கு போங்க..! சூதாட்ட காதல் சூடுபட்டாலும் திருந்தாது

0 20791

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஆடுமேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் தாலி சங்கிலியை பறித்ததாக கல்லூரி காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். படிக்கும் போதே ஆன் லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வழிப்பறி திருடர்களான விபரீத மாணவர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் இரு சக்கர வாகனத்தில் பெண்ணுடன் வந்த இளைஞர் ஐந்தரை பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவத்தில் பெண் உட்பட இருவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கலிக்கநாய்க்கன்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இரு சக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடியின் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் சிறிய அளவிலான தங்க கட்டி இருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் உடனடியாக விசாரணை செய்தபோது கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தொண்டாமுத்தூர் பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது இந்த ஜோடி தான் என்பது தெரியவந்தது.

விசாரணையில் அந்த இளைஞர் சோமயம்பாளையத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பதும் தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருவதும், உடன் வந்தது அவருடைய காதலியும் சுங்கம் பைபாஸ் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி என்பதும் தெரியவந்துள்ளது. படிக்கின்ற போதே ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் இறங்கி லட்சங்களை குவிக்கலாம் என்ற திட்டத்தில் ஏராளமாக கடன் வாங்கி விளையாடியுள்ளனர்.

பல்வேறு நண்பர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று பிரசாந்த் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான காதலர்கள் இருவருமே தொழிலதிபர்களின் வாரிசுகள் என்றும், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் மாணவர் பிரசாந்த் தனது வீட்டில் இருந்த 30 சவரன் நகையை திருடி இருப்பதும், நகைகள் திருடு போனது தொடர்பாக காவல் துறை விசாரித்த போது தங்களது மகன் தான் திருடன் என தெரிந்ததால் அவரது பெற்றோர் புகாரை திரும்பப் பெற்றிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெண்களுடன் வாகனத்தில் சென்றால் போலீசார் வாகன சோதனையின் போது மறிப்பதில்லை என்பதை தெரிந்து கொண்டு தனது காதலியை பைக்கில் ஏற்றிக் கொண்டு செயின்பறிப்புக் கொள்ளைக்கு ஊர் ஊராக பைக்கில் ஜோடி போட்டு சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments