மாநில மொழிகளைப் பயன்படுத்துவது நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டாக்கும் - பிரதமர் மோடி!

0 1783

நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டை நாம் ஊக்குவிப்பது சாதாரண மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பொதுநல வழக்குகள் தன்னல நோக்குடன் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் மாநில முதலமைச்சர்கள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாடு நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்தியச் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நீதித்துறையையும், அதன் உட்கட்டமைப்பையும் மேம்படுத்த அரசு சிறப்பாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

நீதித்துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது டிஜிட்டல் இந்தியா மிஷனின் இன்றியமையாத பகுதி என அரசு கருதுவதாகவும், மின் நீதிமன்றங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டை நாம் ஊக்குவிப்பது சாதாரண மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். வழக்கொழிந்த 1,800 சட்டங்கள் காலத்துக்குப் பொருந்தாமல் இருந்ததை 2015ஆம் ஆண்டில் கண்டறிந்து, 1,450 சட்டங்களை ஒழித்ததாகத் தெரிவித்தார்.

அவற்றில் 75 சட்டங்களை மட்டுமே மாநிலங்கள் ஒழித்ததாகக் குறிப்பிட்டார். முன்னதாக மாநாட்டில் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, திட்டங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் பொதுநல வழக்குகளைத் தந்நல வழக்காகத் தவறாகப் பயன்படுத்தும் நிலை உள்ளதாகத் தெரிவித்தார்.

அரசியலிலும், வணிக நிறுவனங்களிலும் தங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்க அது ஒரு கருவியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். மக்களின் எண்ணங்கள், தேவைகளைக் கருதி விவாதங்களுக்குப் பின் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

சட்டமன்றங்கள், செயலாக்கத் துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மையால் அடிக்கடி வழக்குகள் வருவதாகவும் அவை தவிர்க்கப்பட வேண்டியவை என்றும் குறிப்பிட்டார். சட்டத்தின்படி ஆட்சி நடைபெறும்போது அதில் நீதித்துறை குறுக்கிடாது எனத் தெரிவித்தார்.

நகராட்சிகள், ஊராட்சிகள் கடமையைச் செய்தால், காவல்துறை முறையாக விசாரித்தால், சட்டவிரோதக் காவல் துன்புறுத்தல் இல்லாவிட்டால் நீதிமன்றங்களை நாடி மக்கள் வரவேண்டியதில்லை எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments