அரசு மருத்துவமனையில் தீ விபத்து... வெடித்து சிதறிய சிலிண்டர்கள்..!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் சேமிப்பு கிடங்கு அமைந்திருந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கல்லீரல் மற்றும் நரம்பியல் சிகிச்சை பிரிவிலும் தீ பற்றியது.
இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் உடனடியாக ஏணி வழியாகவும், ஜன்னல் உடைத்து அதன் வழியாகவும் வெளியேற்றப்பட்டனர். இதனால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சேமிப்பு கிடங்கில் தீ பற்றி அங்கிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறிய காட்சிகளும் வெளியாகின.
தீ பற்றியவுடன் 2ஆவது தளத்தில் நரம்பியல் பிரிவில் இருந்த நோயாளி உயிரை காப்பாற்றிக் கொள்ள கரும்புகை சூழ்ந்திருந்த மாடிப்படி வழியாக ஓடினார்.
கரும்புகையால் நோயாளிகள் சிலருக்கு மூச்சுத்திணறலும், கண் எரிச்சலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் சுமார் 3 மணி நேரம் போராடி, சுவற்றில் துளையிட்டு தீயை அணைத்தனர். மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ஆய்வு செய்தனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் நேரடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த சென்னை மேயர் பிரியா, காரில் இருந்து இறங்கி பதற்றத்துடன் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார். பின்னர், நிலவரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இது குறித்து பேரவையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 105 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறினார்.
தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு இந்த ஆண்டுக்கான தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த நிலையில், தடையில்லா சான்றிதழ் வழங்குவது நிலுவையில் இருந்துள்ளது.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் பழமையானது என்பதால், அதனை இடித்துவிட்டு, 40 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்ட திட்டமிட்டிருந்ததாகவும், இந்த நிலையில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Comments