நடு ரோட்டில் சுத்துப் போட்ட சுடிதார் சூறாவளிகள்..! என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்..!

0 4705
நடு ரோட்டில் சுத்துப் போட்ட சுடிதார் சூறாவளிகள்..! என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்..!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகள் இருவர் குடுமிப்பிடி சண்டை போட்டு கொண்ட நிலையில் அவர்களை விலக்கிவிட முடியாமல் சக மாணவிகள் திக்குமுக்காடிப் போயினர்.

சென்னையில் மாணவர்களுக்கு இணையாக வீதியில் இறங்கி சண்டை போடும் விபரீத டிரெண்டுக்கு மாணவிகளும் மாறி வருகின்றனர். கடந்த வாரம் அண்ணா நகர் கல்லூரி மாணவிகள் காதல் பிரச்சனையை தீர்க்க பேருந்து நிறுத்தத்தில் ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து மல்லுக்கட்டிய சம்பவம் அரங்கேறியது..!

அதே பாணியில் இந்தவாரம் சாலையில் சண்டை போடும் விபரீத உரிமையை சென்னை புதுவண்ணாரப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பெற்றுள்ளனர்.

செவ்வாய்கிழமை வழக்கம் போல் கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவிகள் புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது சுடிதார் போட்ட இரு மாணவிகள் இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் முற்றி இருவரும் சூறாவளியாய் மோதிக் கொண்டனர். ஒருவர் தலைமுடியை மற்றவர் பிடித்து குடுமிப் பிடிச்சண்டையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

இருவரையும் விலக்கி விட சென்ற இருதரப்பு மாணவிகளுக்கும் தங்களுக்குள் அடித்துக் கொண்டதால் அந்த இடமே குஸ்திக் களமானது.

குழாய் அடி சண்டைக்கு சற்றும் சளைக்காமல் சார்பட்டா பரம்பரை பேத்திகள் போல ஒருவருக்கொருவர் குத்துச்சண்டையிலும், கும்மாங்குத்துவிலும் ஈடுபட்டனர்

சில மாணவர்கள் உற்சாகமாக லேடி டான்களின் சண்டையை ரசிக்க, இருவர் மட்டும் தைரியமாக மாணவிகளை விலக்கி விட முயன்றனர். பெவிக்கால் போட்டு ஒட்டியது போல பிரிக்க முடியாதபடி இரு சூறாவளிகளும் கையில் தலைமுடியை இறுக்கமாக பற்றிக் கொண்டதால் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இருவரையும் பிரித்து விட்டனர்

இச்சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரைப் பார்த்ததும் மாணவ- மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரி வளாகத்திற்குள் ஒருவரை ஒருவர் செல்லமாக தட்டிக் கொள்ள அது வாய்தகராறாக மாறி பேருந்து நிறுத்தத்தில் குடுமிப்பிடி சண்டையாக மாறியது தெரியவந்தது. மாணவிகள் இதுபோன்று சண்டையில் ஈடுபட்டு ஆடைகள் கிழிந்தால் அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தான் அவப்பெயர் என்று எச்சரிக்கும் காவல் துறையினர், இது போன்ற தாக்குதல்களை மாணவிகள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக 10 மாணவிகளை இடைநீக்கம் செய்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வீடியோவில் பதிவான மாணவிகளை அடையாளம் கண்டு அவர்களில் 10 பேரை அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 5 மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments