ரஜினியை கலங்கடித்த சிங்கார வேலன் போலீசால் கைது செய்யப்பட்டது எப்படி ? 2 வருட கண்ணாமூச்சி ஆட்டம்
லிங்கா படத்தால் நஷ்டம், என்று ரஜினியை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பெற்ற வினியோகஸ்தர் சிங்கார வேலன், மன்னர் வகையறா படத்தால் நஷ்டம் என்று நடிகர் விமலிடம் 2 கோடி ரூபாய் வரை ஏமாற்றி பெற்றுக் கொண்ட நிலையில், மீண்டும் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஜினி நடிப்பில் , கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான லிங்கா படத்தால் நஷ்டம் என்று படம் வெளியான இரு தினங்களில் போர்க்கொடி உயர்த்தியதோடு, உண்ணாவிரதம் எல்லாம் இருந்து ரஜியை மிரட்டி குறிப்பிட்ட கோடிகளை இழப்பீடாக பெற்றவர் மெரீனா பிக்சர்ஸ் சிங்கார வேலன்..!
இந்த சம்பவத்துக்கு பின்னர் லிங்கா சிங்கார வேலன் என்று அழைக்கப்படும் அளவுக்கு திரை உலகினர் மத்தியில் பிரபலமானார். சிறிய படங்களை வாங்கி வினியோகம் செய்து வந்தாலும் ஒரு பக்கம் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்வது, படத்தயாரிப்பு என்று ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் விமல் நடிப்பில் திருப்பூர் கணேசன் தயாரித்து வந்த மன்னர் வகையறா என்ற படம் நிதி நெருக்கடி காரணமாக பாதியில் நின்றது.
இடையில் திருப்பூர் கணேசன் காலமானதால் ,நடிகர் விமல் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி மன்னர் வகையறா படத்தை தொடர்ந்து தயாரிப்பதற்கு உதவுவதாக கூறி தயாரிப்பு மேற்பார்வையாளராக உள்ளே நுழைந்தார் சிங்காரவேலன், பழைய தயாரிப்பாளர் திருப்பூர் கணேசனுக்கு கொடுப்பதற்காகவும், படத்தின்தயாரிப்பு செலவுக்கு என்றும் பைனான்ஸியர் கோபியிடம் 5 கோடி ரூபாய் பைனாஸ் பெற்றுள்ளனர். இணைதயாரிப்பாளர் திரு நாவுக்கரசுவிடம் ஒரு கோடிரூபாய் பெற்றுள்ளனர்.
மன்னர் வகையறா படம் திரையரங்கு வசூல் , வெளி நாட்டு உரிமம், சாட்டிலைட் உரிமம் என மொத்தம் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்று நட்டமின்றி தப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை மறைத்த சிங்கார வேலன் மன்னர் வகையறா படத்திற்கு நட்டக் கணக்கு காட்டியதோடு பைனான்ஸியர் கோபிக்கும், திரு நாவுக்கரசுவுக்கும் வழங்க வேண்டும் எனக்கூறி 2 கோடி ரூபாய் பணத்தை நடிகர் விமலிடம் இருந்து மோசடியாக பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களிடம் பணத்தை கொடுக்காத சிங்காரவேலன், இருவரை வைத்தே விமலுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கவும் செய்துள்ளார் .
இது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் காவல்துறையில் விமல் புகார் அளித்துள்ளார், போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் 2021 ஆம் ஆண்டு சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி சிங்கார வேலன் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இதில் விமலிடம் கையாடல் செய்த பணத்தை திருப்பி கொடுப்பதாக உறுதி அளித்து சிங்கார வேலன் இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் விமலிடம் பணம் கேட்டு மிரட்டும் விதமாக , சிங்கார வேலன் , வேறு வேறு நபர்களை அனுப்பி காவல் ஆணையரகத்தில் விமலுக்கு எதிராக மீண்டும் புகார் அளிக்க செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிங்காரவேலனின் மிரட்டல் நாடகம் குறித்து விரிவாக விளக்கம் அளித்த விமல், நீதிமன்றத்தின் உறுதி அளித்தபடி தனக்கு தரவேண்டிய 2 கோடி ரூபாய் பணத்தை தராததால், அவரது முன் ஜாமீன் ரத்தாகி விட்டதாகவும், தற்போது மீண்டும் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கட்ட பஞ்சாயத்து புரொடக் ஷன் மேற்பார்வையாளரான சிங்காரவேலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தனக்கு 5 லட்சம் ரூபாய் முன் பணம் தந்தால் தான் நடிகர் விமல் கதை கேட்பார் எனக்கூறி தயாரிப்பாளர் ஒருவரிடம் சிங்கார வேலன் 5 லட்சம் ரூபாய் பெற்று கையாடல் செய்த வழக்கு தொடர்பாகவும் சிங்கார வேலனை போலீசார் 2 வது முறையாக கைது செய்துள்ளனர்.
படத்தயாரிப்பில் ஈடுபடும் நடிகர்கள் அவமானத்திற்கும், இமேஜ் குறித்தும் கவலை படுகிறவர்கள் என்ற ஒற்றை காரணத்தை வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த சிங்கார வேலன் போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதால் அவரிடம் பணம் பறிகொடுத்தவர்கள் துணிந்து போலீசில் புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments