சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பிரேக் பிடிக்காததால் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

0 4022
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பிரேக் பிடிக்காததால் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பணிமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்சார ரயில், கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை மீது ஏறி, அங்கிருந்த கடைகளின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

தாம்பரம் மார்க்கமாக இயக்கப்படும் மின்சார ரயில் ஒன்று பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 4.25 மணியளவில் கொண்டுவரப்பட்டது. கடற்கரை ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடைக்கு மிதமான வேகத்தில் அந்த ரயில் வந்தது.

அப்போது எதிர்பாராவிதமாக ரயிலில் பிரேக் பிடிக்காத நிலையில், கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது வேகமாக ஏறி அங்கிருந்த கடைகள் மீது மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

பணிமனையில் இருந்து பயணிகள் யாருமின்றி காலியாக அந்த ரயில் வந்ததாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ரயில் நிலையத்தில் மக்கள் அதிகளவில் இல்லாததாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

நடைமேடை மீது ரயில் மோதிய போது அதன் ஓட்டுநர், வெளியே குதித்ததால் அவர் காயமின்றி தப்பியதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. விபத்தில் ஒன்றாம் நடைமேடை மட்டும் சேதமடைந்ததாகவும், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்தின்போது எஞ்சினுடன் இணைக்கப்பட்ட பெட்டி நடைமேடை மீது ஏறிய நிலையில், அதற்கு அடுத்த பெட்டி மட்டும் தடம் புரண்டதால், எஞ்சியுள்ள பெட்டிகளை ரயிலில் இருந்து அகற்றி பிரிக்கும் பணி நடைபெற்றது.

மேலும், விபத்து ஒன்றாவது நடைமேடையில் நிகழ்ந்தாதால், மற்ற நடைமேடைகளின் வழியே தடையின்றி ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments