2 குழந்தைகளுடன் சாலையில் தவித்த பெண்ணுக்கு போலீஸ் உதவி..! ட்ரீபோ செயலியை நம்பினால் சிக்கல் தான்..!

0 6572
2 குழந்தைகளுடன் சாலையில் தவித்த பெண்ணுக்கு போலீஸ் உதவி..! ட்ரீபோ செயலியை நம்பினால் சிக்கல் தான்..!

குழந்தையின் சிகிச்சைக்காக கோவையில் இருந்து இரு குழந்தைகளுடன் சென்னை வந்த பெண் ஒருவர் , தனியார் விடுதி நிர்வாகம் அலைகழித்ததால் வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆன்லைன் செயலி மூலம் விடுதியில் அறை எடுத்தவர் சந்தித்த சிக்கலை காவல்துறையினர் சரி செய்த பின்ணனி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோமதி. இவரது கணவர் ஜெயந்த் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் 4 மற்றும் 5 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது இளைய மகனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கோமதி சிகிச்சைக்காக சென்னை வரவேண்டியிருந்தது.

தனது கணவர் ஊரில் இல்லாததால், இரு குழந்தைகளுடன் தனியாக சென்னை வர தீர்மானித்த கோமதி, ட்ரீபோ என்ற செயலி மூலம் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் அறையை முன்பதிவு செய்துள்ளார்.

அதற்கான முன்பணத்தையும் செலுத்திய கோமதி, விடுதி ஒதுக்கப்படும் நேரம் 12 மணி என்றிருந்ததைக் கண்டு, செயலியில் அளிக்கப்பட்டிருந்த விடுதிக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

பின்னர் தொலைபேசியில் பேசிய விடுதி ஊழியரிடம், தனக்கு மதியம் 12 மணிக்கு அறை ஒதுக்கப்படும் என குறுந்தகவல் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்ட அவர், உடல்நிலை சரியில்லாத குழந்தை உட்பட இரு குழந்தைகளுடன் தனியாக வருவதாகவும், கோவையில் இரவு புறப்படு காலை 7 மணிக்கு சென்னை வந்தடைவதால் அந்த நேரத்திலேயே தனக்கு அறை ஒதுக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோமதியின் வேண்டுகோளுக்கு இணங்க விடுதி ஊழியர்களும் அவர் வரும் நேரத்தில் அறை ஒதுக்கித் தருவதாக உத்தரவாதம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

அதனை நம்பி சனிக்கிழமை காலை சுமார் 7.20 மணிக்கு தனது இரு குழந்தைகளுடன் சென்னை வந்த கோமதி நுங்கம்பாக்கத்திலுள்ள சம்பந்தப்பட்ட தனியார் விடுதிக்குச் சென்று அறை ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த விடுதி ஊழியர்கள் உங்களுக்கு 12 மணிக்கு மேல்தான் அறை ஒதுக்க முடியும் எனவும், அதுவரை வேண்டுமானால் காத்திருப்பு அறையில் இருக்குமாறும் கூறி கடுமையான குரலில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த கோமதி, தனது நிலை குறித்து முன்கூட்டியே விடுதி நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அறை ஒதுக்க வேண்டுகோள் வைத்ததை எடுத்துக் கூறியுள்ளார்.கோமதி எடுத்துக்கூறியும் தொடர்ந்து தனியார் விடுதி ஊழியர்கள் கோமதியிடம் கண்டிப்புடனும், தகாத முறையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து குழந்தைகளுடன் வெளியேறிய கோமதி, தன்னை வழியில் கண்டு விசாரித்த நுங்கம்பாக்கம் உதவி ஆய்வாளர் அப்துல் என்பவரிடம் நடந்தவற்றை விவரித்துள்ளார். பின்னர் உதவி ஆய்வாளர் அப்துல், கோமதி மற்றும் குழந்தைகளை காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு விடுதிக்குச் சென்று அறை ஒதுக்கி உதவுமாறு கூறியுள்ளார்.

விடுதி ஊழியர்கள் காவல்துறை யினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அறை ஒதுக்கித் தரவோ, அளித்த பணத்தை உடனே திரும்பத்தரவோ முடியாது எனவும், பணம் வேண்டுமென்றால் அறையை முன் பதிவு செய்த செயலி மூலம் மீண்டும் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கோமதி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணையை தொடங்கினர்.

முறையாக விசாரணை நடத்திய போலீசாரிடம், விடுதி நிர்வாகத்தினர் மன்னிப்பு கோரியதோடு, அந்தப் பெண்ணிடம் ட்ரிப்போ செயலி மூலம் பெற்ற முன்பதிவு தொகையை திருப்பிக் கொடுத்தனர். இதையடுத்து அந்த பெண்ணையும், இரு குழந்தைகளையும் பாதுகாப்பாக ஒரு தங்கும் விடுதியில் போலீசார் தங்கவைத்தனர்.

அதே நேரத்தில் இது போன்ற செயலிகளின் அறைகள், முன்பதிவு செய்வதற்கு முன்பாக விடுதிகளின் நிபந்தனைகளை தெரிந்து கொள்வது அவசியம் என்கின்றனர் காவல்துறையினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments