பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி ஜம்முவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு.!

0 1650

நாடு முழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி ஜம்முவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நாடு முழுவதும் உள்ள கிராமசபைகளுடன் அவர் காணொலி வாயிலாக உரை நிகழ்த்துகிறார்.

நாடு முழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பஞ்சாயத்து உறுப்பினர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியை ஒட்டி பள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கான அறிவியல் தொழில் நுட்ப கண்காட்சி நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சேனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள ரட்லே மற்றும் குவார் ((Ratle and Kwar)) நீர்மின் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் பனிஹால் - குவாசிகுண்ட் இடையே 3,100 கோடி ரூபாய் செலவில் 8.45 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள இரு வழி குகைப்பாதையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, நிறைவடைந்த திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி இன்று அங்கு செல்கிறார்.
அவரது பயணத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

உள்ளூர் போலீசாருடன், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர வாகன சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments