தீ வச்சிருவேன்.... பூச்சாண்டி காட்டிய கண்ணகியால் பரபரப்பு..! 100 வீடுகள் இருளில் மூழ்கியது
சென்னை மணலியில், திருமணத்திற்கு பிந்தைய கணவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீட்டைப் பூட்டிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாக பெண் ஒருவர் 9 மணிநேரம் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மணலி ஈவேரா பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் கண்ணா இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றிவருகிறார். இவருக்கும் மதுரை சேர்ந்த ரேணுகாவுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த தம்பதிக்கு வயதுக்கு வந்த இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் ரமேஷ் கண்ணா, வேறு ஒரு பெண்ணுடன், காதலில் விழுந்து திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டுள்ளார்.
மனைவி பலமுறை கண்டித்தும் ரமேஷ் கண்ணா கேட்காமல் தொடர்ந்து தனது விபரீத காதலை வளர்த்து வந்துள்ளார்.
தனது வீட்டில் அழகு நிலையம் நடத்தி வந்த ரேணுகா, சம்பவத்தன்று ரமேஷ் கண்ணாவின் காதல் விவகாரம் குறித்து கேட்டதால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது
இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த ரேணுகா தனது வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு வீட்டில் இருந்த மூன்று சமையல் சிலிண்டர்களையும் திறந்து வைத்துள்ளார். அங்கு உள்ள ஷோபாவில் அமர்ந்து கொண்டு தனது வாழ்க்கைக்கு நீதி கிடைக்காவிட்டால் தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்ட தொடங்கினார். இதனால் பதறிபோன அப்பகுதி மக்கள் சமாதானப்படுத்த முயன்றனர் முடியவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக மணலி போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர் மணலி தீயணைப்பு துறை அதிகாரி முருகானந்தம் தலைமையில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் இரண்டு தீ அணைப்பு வாகனத்தில் விரைந்து வந்து போலீஸ் பாதுகாப்புடன், முதலில் அப்பகுதியில் உள்ள மக்களை அவர்களது வீட்டில் இருந்து வெளியேற்றினர்
அடுத்த சில மணி நேரங்களில் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார துறையினர் மின்சாரத்தை துண்டித்தனர்
விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைத்து நிறுத்தி வைக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி 21 வார்டு கவுன்சிலர் ராஜேஷ் ரேணுகாவிடம் செல்போனில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் ஆனால் அதற்கு ரேணுகா செவி சாய்க்கவில்லை.
இதனையடுத்து ரேணுகாவின் தாய் அமராவதி தந்தை கந்தசாமி மற்றும் பெண் தோழிகள் உறவினர்கள் பேச முற்பட்ட பொழுது கேஸ் சிலிண்டரை திறந்து வைத்து பகிரங்கமாக மிரட்டினார் ரேணுகா..
மதியம் 12 மணி முதல் மாலை 8 ;30 மணிவரை ரேணுகாவின் போராட்டம் தொடர்ந்ததால், வீட்டிற்கு செல்ல முடியாமலும், மின்சாரம் இல்லாமலும் வெளியே காத்திருந்த அப்பகுதி மக்கள் ஆவேசத்துடனும், கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டனர்.
அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக ரேணுகா இது போன்ற தற்கொலை முயற்சி என்று பூச்சாண்டி காட்டுவது வழக்கம் என தெரிவித்த அப்பகுதி மக்கள் கதவை உடைத்து உள்ளே செல்லபோவதாக ஆவேசமாயினர்.
இதையடுத்து அதிரடியாக ரேணுகா வீட்டின் கதவை உடைத்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கியாஸை செயல் இழக்க செய்த நிலையில் வீட்டிற்குள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த ரேணுகா மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் ரேணுகா மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கு கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இவ்வளவு களே பாரங்களுக்கும் நடுவில் ரேணுகாவின் கணவர் ரமேஷ் கண்ணாவோ தனக்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தமில்லாதது போல நின்று கொண்டது குறிப்பிடத்தக்கது.
Comments