மாடுமேய்க்கவும், சைக்கிள் ஓட்டவும் தெரிஞ்சா கவர்மெண்ட் வேலை.. படையெடுத்த பட்டதாரிகள்..!

0 11671

கால் காசு ஊதியம் என்றாலும் அது கவர்மெண்ட் ஊதியமாக இருக்கனும் என்ற மனோபாவத்தால் 10 ஆம் வகுப்பு தகுதிக்குரிய  கால் நடை உதவியாளர் பணிக்கு எம்.பி.ஏ படித்தவர்கள் எல்லாம் நூற்றுக்கணக்கில் நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர். ஒழுங்கா படிச்சாலும் மாடு மேய்க்கவும், சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள 48 கால்நடை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இந்த பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்ற நிலையில் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை 5906 பேர் விண்ணபித்திருந்தனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு புதன்கிழமை தொடங்கியது.

இதில் 10 ஆம் வகுப்பு பள்ளிப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக பல்வேறு பட்டப்படிப்பு முடித்தவர்களும் அதிகமாக கலந்து கொண்டனர். பட்டதாரிகள் பலரும், கையில் தங்களது கல்வி சான்றிதழ் சகிதம் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டது ஆச்சரியத்தையும், அரசு வேலை வாய்ப்பு மீதான கள யதார்த்தத்தையும் உணர வைத்தது.

கால் காசு சம்பளம் என்றாலும் கவர்மெண்ட் சம்பளம்’ என்னும் மனோபாவத்தால் அரசுப்பணியின் மீது மக்களுக்கு இருக்கும் மோகம் ஒரு பக்கம் இருந்தாலும், படித்த இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்புக்கான சூழல் இல்லாததால், தங்கள் படிப்புக்கேற்ற வேலையைவிட கிடைத்த வேலையை செய்யும் மனப்பக்குவத்துடன் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அணிவகுத்து நின்றனர்.

நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தவர்களுக்கு, சைக்கிள் ஓட்டத் தெரிகிறதா? மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை அவிழ்த்து கட்டி சரியாகக் கையாளத் தெரிகிறதா? என்பது உள்ளிட்ட சோதனைகள் நடைபெற்றன. பட்டதாரிகள் பலரும் போதிய வேலை கிடைக்காததால் கால்நடை உதவியாளர் பணியிடத்திற்காக சைக்கிள் ஓட்டவும், மாடுகளை கையாளவும் செய்தனர்.

அதில் பொறியியல், எம்.பி.ஏ பட்டதாரிகளும் அதிக அளவில் பங்கேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்களின் திறனை அதிகாரிகள் செய்முறைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கினர்.

இரண்டாவது நாளான வியாழக்கிழமை மாலை 5.30 வரை நடக்கும் இந்த நேர்முகத் தேர்வுக்கு 750 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 600 முதல் 750 பேர்வரை கலந்துகொள்கிறார்கள். 29-ம் தேதி வரை நடக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு வரும் 30-ம் தேதி, மதியம் ஒருமணிவரை மட்டும் கலந்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இனி ஒழுங்கா படிக்காவிட்டால் மாடு மேய்க்க தான் போகணும் என்று எவரும் திட்ட இயலாது, காரணம், ஒழுங்கா படிச்சாலும் மாடு மேய்க்கத்தான் போகணும் போல என இங்கு வந்த பட்டதாரிகள் புலம்பிச்சென்றதை பார்க்க முடிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments