மனைவியை கொன்று சடலத்துடன் படுத்து உறங்கிய குடிகார கணவன்.. போதையின் விபரீத பாதை.!

0 3728

சிதம்பரம் அருகே குடி போதையில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு மனைவியின் சடலத்துடன் படுத்து உறங்கிய கணவனை தண்ணீர் தெளித்து எழுப்பி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. கண்ணை மறைத்த தந்தையின் குடியால் தாயை இழந்த இரு குழந்தைகளின் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் . கட்டிட தொழிலாளியான இவரது மனைவி தீபா . இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

மதுபழக்கத்துக்கு அடிமையான ஆன்ந்த் , தினமும் இரவு குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் சத்தம் அடங்கியதாக கூறப்படுகின்றது.காலை வெகு நேரமாகியும், ஆனந்த் வீடு திறக்காமல் இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, ரத்த காயங்களுடன் தீபா சடலமாக கிடப்பதும், அருகில் ஆனந்த் மூச்சு பேச்சில்லாமல் படுத்து இருப்பதையும் பார்த்து இருவரும் உயிரிழந்து விட்டதாக கருதி போலீசுக்கு தகவல் அளித்தனர்

அண்ணாமலைநகர் போலீசார் விரைந்து வந்து பார்த்த போது போதையின் ஆனந்த் நெளிந்ததால் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து விசாரித்த போது மனைவி தீபாவை கொலை செய்து விட்டு அவருடன் படுத்து உறங்கியது தெரியவந்தது.

சம்பவத்தன்று போதையில் வீட்டுக்கு வந்த கணவனிடம் எதற்காக குடித்து உடலை கெடுத்து கொள்கிறீர்கள் என்று மனைவி கேட்டதால், ஆத்திரமடைந்த ஆனந்த் உருட்டுக்கட்டையால் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே மனைவி தீபா ரத்தவெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். தான் தாக்கியதில் மனைவி இறந்து விட்டார் என்பது கூட தெரியாமல் போதையில் அவரது உடல் அருகிலேயே படுத்து உறங்கி உள்ளான் குடிகார குடும்பஸ்தன் ஆனந்த் என்கின்றனர் காவல்துறையினர்.

தீபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடி குடியை கெடுக்கும் என்ற எச்சரிக்கை உண்மையான நிலையில் போதையால் நிதானமிழ்ந்த தந்தையால், தாயை இர்ழந்து அவர்களது இரு குழந்தைகளும் தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments