வெளக்குமாறு பிய்ய.. பிய்ய.. அஜால் ஆட்டோ ஓட்டுனருக்கு அக்கா வைத்த அடிமுறை..! வீட்டுக்காரர் முன் வூடு கட்டினார்

0 3870

தென்காசி அடுத்த செங்கோட்டை அருகே தனியாக ஆட்டோவில் சென்ற போது ஆபாசமாக அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஆட்டோ ஓட்டுனரை , பெண் ஒருவர் விளக்குமாற்றால் அடித்து வெளுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆட்டோ மன்மதனுக்கு, ஆட்டோ ஸ்டாண்டில் விழுந்த அடிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தனியாக ஆட்டோவில் வந்த பெண்ணிடம் வம்பு செய்ததால் பெண்ணால் முறைவாசல் செய்யப்பட்டார் செங்கோட்டை ஆட்டோ ஓட்டுனர் கண்ணன்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அங்கன்வாடி மையத்தில் பணி புரியும் பெண் ஊழியர் ஒருவர் சம்பவத்தன்று ஆட்டோவில் அங்கன்வாடி மையத்திற்கு சென்றுள்ளார். ஆட்டோவில் அந்த பெண் தனியாக இருந்துள்ளார்.

அப்போது ஆட்டோ ஓட்டுநரான கண்ணன் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதோடு, தனிமையை சாதகாமாக்கிக் கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனால் ஆட்டோவை விட்டு இறங்கிய அந்தப்பெண் ஆட்டோ ஓட்டுனரின் சேட்டை குறித்து தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுனருக்கு பாடம் புகட்ட உறவினர்கள் புடை சூழ கையில் வெளக்குமாறுகளுடன் ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்ற கணவன், தனது மனைவி கையில் வெளக்குமாற்றை கொடுத்த அடுத்த நொடி, ஆட்டோ ஓட்டுனரை அடி வெளுக்க தொடங்கினார் அந்த பெண்..!

மனைவியுடன் சேர்ந்து அவரது கணவரும் ஆட்டோ ஓட்டுனருக்கு அர்ச்சனையுடன் ரெண்டு தட்டு தட்ட, என்ன செய்வதென்று தெரியாமல் ஆட்டோ ஓட்டுனர் தயங்கி நின்றார்.

அந்த பகுதியில் நின்ற ஆட்டோ ஓட்டுனர்கள் யாரும் இவருக்காக சிபாரிசு வராதீங்க என்று அந்தப்பெண் அனைவரிடமும் கேட்டுக் கொண்டதால் ஒருவர் கூட அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை , மாறாக ஒரு பெண் மட்டும் அடித்தது போதும் என்று குரல் கொடுக்க, அவரிடம் நிலைமையை விளக்கி கண்ணனுக்கு அடுத்த ரவுண்டு அடி விழுந்தது.

உறவினர்கள் சூழ்ந்து நின்றதால் அடி விழுந்தாலும் திருப்பி அடிக்க இயலாமல் ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் கள்ள மவுனம் காக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

மேலும் தன்னிடம் ஆட்டோ ஓட்டுனர் அத்துமீறியதாக செங்கோட்டை காவல் நிலையத்தில் அந்தப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் செங்கோட்டை போலீசார் கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் இரவோ, பகலோ, மக்களின் அவசர உதவிக்கும், அத்தியாவசிய பயணத்துக்கும் நியாயமான கட்டணத்துடன், பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும் எத்தனையோ நல்ல ஆட்டோ ஓட்டுனர்கள் சமூகத்தில் உள்ள நிலையில் கண்ணனை போன்ற காமுகர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments