அண்ணன், தம்பி, தங்கை படுகொலை.. நிலத் தகராறில் அரங்கேறிய பயங்கரம்.!

0 4155

நெல்லை மாவட்டம் மானூர் அருகே நிலத் தகராறில் அண்ணன், தம்பி தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  

நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த நாஞ்சான்குளம் பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவரான ஜேசுராஜ் என்பவருக்கும் அவரது சித்தப்பா மகனான அழகர்சாமி என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. பிரச்சனைக்குரிய அந்த 1.96 ஏக்கர் நிலமானது இருவருடைய தகப்பனார்களுக்கும் கூட்டுப்பட்டாவாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த இடத்தில் ஜேசுராஜ் குடும்பத்தினருக்குத் தெரியாமல் அழகர்சாமி போர்வெல் லாரியை அழைத்து வந்து ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளார்.

தகவல் தெரிந்து அங்கு வந்த ஜேசுராஜ், அவரது தம்பி மரியராஜ், தங்கை வசந்தா ஆகியோர், கூட்டுப்பட்டாவில் உள்ள நிலத்தில் தங்கள் அனுமதி இல்லாமல் எப்படி ஆழ்துளை கிணறு அமைக்கலாம் என வாக்குவாதம் செய்துள்ளனர்.

வாய்த்தகராறு முற்றி மோதலாக வெடித்த நிலையில், ஜேசுராஜ், மரியராஜ், வசந்தா உட்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொலையான 3 பேரில் வசந்தா, தாலுகா அலுவலத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்துள்ளார். கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், நாஞ்சான்குளம் கிராமத்திலும் அரசு மருத்துவமனையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே, 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அழகர்சாமி, அவரது இரு மகன்கள், மனைவி, மருமகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி பிரவேஸ் குமார் தெரிவித்துள்ளார்.

மோதலில் காயமடைந்ததால், அழகர்சாமியின் மனைவி மற்றும் மருமகன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments