காதல் மனைவியை கொன்ற கணவன்.. 15 வருஷம் வாழ்ந்தும் நம்பிக்கையில்லை.. சந்தேகத்தால் சின்னாபின்னாமான குடும்பம்

0 2025
சேலம் அருகே, 15 வருடமாக உடன் வாழ்ந்த காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக் கொலை செய்த கணவன், தவறான சகவாசத்தால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி போலீசில் சிக்கியுள்ளான்.

சேலம் அருகே, 15 வருடமாக உடன் வாழ்ந்த காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக் கொலை செய்த கணவன், தவறான சகவாசத்தால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி போலீசில் சிக்கியுள்ளான். சந்தேக பேய் பிடித்து காதல் மனைவியை கொலை செய்த கணவனால் 2 பிள்ளைகளும் நிர்கதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கோவிந்தராஜபாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார், பட்டபடிப்பு முடித்துவிட்டு, சொந்தமாக கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணும் 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர்.

வியாழக்கிழமை சசிகலாவின் குடும்பத்தினருக்கு செல்போனில் அழைத்த ஜெயக்குமார், தவறான சகவாசத்தின் விளைவால் சசிகலா தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருக்கிறார். அவர்கள் நேரில் வந்து பார்த்த போது, சசிகலா உடலில் அடித்ததற்கான காயங்கள் இருக்கவே, சந்தேகமடைந்து சசிகலா சாவில் மர்மம் இருப்பதாக ஆத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. பிஎஸ்.சி., பி.எட். முடித்துள்ள சசிகலா, அங்குள்ள தனியார் பயிற்சி மையத்தில் டெட் (TET) தேர்வுக்காக பயிற்சி எடுத்து வந்தார்.

ஆரம்பத்தில் இருந்தே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஜெயக்குமார் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. தன்னை விட மனைவி அழகாக இருப்பதால் வேறு யாரிடமும் பேசிவிடக்கூடும் என நினைத்து பிரச்சனை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. அத்தோடு, சசிகலா தனது தாய், தந்தை உட்பட யாரிடம் செல்போனில் பேசினாலும், அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாக கூறி ஜெயக்குமார் தகராறு செய்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்த போதெல்லாம், குடும்பத்தினர் பேசி சமாதானம் செய்து வைத்திருக்கின்றனர். அத்தோடு, தன்னை விட மனைவி அதிகமாக படித்திருப்பதையும் அடிக்கடி சொல்லிக்காட்டி ஜெயக்குமார் சண்டை இழுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

சம்பவத்தன்று, படிப்பு சம்பந்தமாக போனில் பேசிக் கொண்டிருந்த சசிகலாவை ஜெயக்குமார் கண்டிக்கவே இருவருக்கும் இடையே தகராறு மூண்டதாக கூறப்படுகின்றது. சந்தேகத்தால் மூளை மழுங்கி என்ன செய்கிறோம் தெரியாமல் ஆத்திரப்பட்ட ஜெயக்குமார், மனைவியை கீழே தள்ளிவிட்டு தாக்கிய போது சசிகலா மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாகவும், பின்னர், கொலை செய்தது தெரியாமல் இருக்க, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல், சடலத்தை தொங்கவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறான். இதனையடுத்து, ஜெயக்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல் சந்தேக கண்ணுடன் பார்த்தால், எல்லாமே தவறாகத்தான் தெரியும், அது விபரீதத்திற்கும் வழிவகுக்கும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கிறது இந்த சம்பவம்.....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments