மதுரை அரசிக்கு மாங்கல்ய வைபவம்.. விமரிசையாக நடந்த திருமணம்.!

0 1812

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி - சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

12 நாட்கள் நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சிக்கும் - சுந்தரேஷ்வரருக்குமான திருக்கல்யாண வைபவம் மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. அதிகாலை 4 மணி அளவில் மீனாட்சியும் - சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் வலம் வந்தனர்.

பின்னர், திருக்கல்யாண மண்டபத்தில் திருப்பரங்குன்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளி ஏற்கனவே தயாராக இருந்தனர். இதனையடுத்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய மதுரையின் பட்டத்து அரசியான மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் சுவாமியும் திருமணக் கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

முன்னதாக திருக்கல்யாண மேடை ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 டன் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாண வைபவம் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாணத்தை கண்டு ரசித்தனர்.

திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்கள் வசதிக்காக, கோவில் வளாகம் மற்றும் மாசி வீதிகளில் 20 இடங்களில் பிரமாண்ட கணினி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பக்தர்கள் அனைவருக்கும் கல்யாண விருந்தும், பிரசாதமும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை ஒட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments