பாம்பின் வாயில் சிக்கி போராடி தப்பித்த தவளையார்..! வாழ்க்கை பாடத்தின் வாத்தியார்..!

0 3303
பாம்பின் வாயில் சிக்கி போராடி தப்பித்த தவளையார்..! வாழ்க்கை பாடத்தின் வாத்தியார்..!

பாம்பின் வாயில் சிக்கிய தவளை ஒன்று கடுமையான முயற்சிக்கு பின்னர் விரைவாக தப்பிச்சென்ற காட்சி தன்னம்பிக்கை வரிகளுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. வாழ்க்கையில் வாய்ப்புகளை தவற விடுவதற்கும், வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கும் சாட்சியாக மாறியுள்ள வீடியோ காட்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ஆடி போயி ஆவணி பிறந்தால் எம்புள்ள டாப்பா வருவான் என்று என்ஜினீயரிங் படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டை சுற்றிவரும் விஐபிகளுக்கு அம்மாக்கள் ஆறுதல் சொல்வது வழக்கம்..!

வாய்ப்புகள் தானாக அமையாது நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும், என்று புத்தி சொல்ல நமது உறவுகளில் 10 பேர் இருந்தாலும் உருப்படியான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர ஒருவர் கூட இருப்பதில்லை என்பது இளைஞர்களின் ஆதங்கம்..!

அப்படிப்பட்ட வாய்ப்புகளை எப்படி பயன்படுத்துவது என்று குறித்து ஒரு தவளை நமக்கு பாடம் எடுக்கும் காட்சி தான் சமூக வலைதளங்களில் தற்போது தன்னம்ம்பிக்கை வரிகளுடன் வைரலாகின்றது. கிரில் கதவு ஒன்றில் ஏறிக் கொண்டிருக்கும் தவளையின் பின்பக்க காலை பாம்பு ஒன்று கவ்விப்பிடித்து விடுகின்றது

பாம்பின் வாயில் கால் சிக்கினாலும், நம்மால் இதில் இருந்து தப்பிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் தவளை மேல் நோக்கி இழுக்க, பாம்பு கீழ் நோக்கி இழுக்கின்றது. அந்த கரு நாகத்தின் பிடியில் இருந்து தப்பிக்க தன் பலம் கொண்டம் மட்டும் மேல் நோக்கி நகர்கின்றது தவளை

பாம்பு தனது பிடியை விடாமல் அந்த தவளையை முழுவதுமாக கடித்து விழுங்குவதற்கு எத்தணிக்கின்றது. காலை விட்டு விட்டு தவளையின் உடலை கவ்வ நினைத்த பாம்பிடம் இருந்து, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தப்பிய தவளை அடுத்த சில வினாடிகளுக்கெல்லாம் தத்தி தாவி கம்பியின் மேல் பகுதி வழியாக சென்று சுவற்றில் தாவி தன்னை காப்பாற்றிக் கொண்டது.

அதே நேரத்தில் வாயில் கிடைத்த தவளையை பிடித்து வாய்க்குள் இழுக்காமல் மெத்தனமாக மொத்தமாக கவ்வ நினைத்த பேராசையால் தப்பிய தவளையை பிடிக்க தவழ்ந்து சென்று ஏமாந்தது பாம்பு..!

வெளி நாடு ஒன்றில் படமாக்கப்பட்ட இந்த வீடியோ காட்சிகளை வைத்து காலத்தின் அருமை குறித்தும், சிலர் தன்னம்பிக்கைக்கு சாட்சி என்றும் பலர் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி எனவும் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதற்கு சாட்சியாக , இந்த வீடியோ காட்சி என அதிகம் பேர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments