இந்தியா ரஷ்யா நட்பு -அமெரிக்கா அதிருப்தி!

0 1303

இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை திங்கட்கிழமை வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இந்தியா ஈடுபடுவது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்கும் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கும் இந்தியா மேற்கொள்ளும் வர்த்தகத்தை குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. இதற்கான பின்விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை இந்தியா எதிர்க்காமல் இருப்பது மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான ஐநா.சபை வாக்கெடுப்புகளில் இருந்து விலகி இருப்பது குறித்தும் அமெரிக்கா அதிருப்தியை தெரிவித்தது. செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் பிரையன் டெஸ்ஸி, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உக்ரைன் போர் விவகாரத்தில் எடுத்த நிலைப்பாடு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை வாங்குவதற்கான மாற்று வழிகளை இந்தியா பரிசீக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த வாரம் டெல்லி வந்த அமெரிக்க துணை அமைச்சர் விக்டோரியா நூலாண்ட் இதற்கு அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.ஆனால் ரஷ்யா தரும் ஆயுதங்களைவிட இதர நாடுகளின் ஆயுதங்களுக்கான விலை மிக அதிகமாக இருப்பதாக இந்தியாவின் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந் நிலையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்க அமைச்சர்களுடன் பேச்சு நடத்த பயணம் மேற்கொள்ள உள்ளனர். வாஷிங்டனில் ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியா அமெரிக்கா அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட உள்ளது. ஆயினும் இப்பிரச்சினை அமெரிக்காவுடனான உறவுகளுக்கு ஒரு தடைக்கல்லாக இருக்காது என்று இந்திய வெளியுறவுத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ரஷ்யா முக்கியமான கூட்டாளி என்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக் காட்டியுள்ளார்.நாட்டின் நலன் கருதி எது முக்கியமோ அதனை இந்தியா செய்து வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார். உக்ரைனில் வன்முறையை கைவிட இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் உக்ரைன் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி கோரி வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments