பள்ளி மாணவியை கடத்தி மால் மாலாக சுற்றிய பர்தா பெண்.. சூது கவ்விய பின்னணி.!

0 2376

சென்னையில் பள்ளி மாணவியை கடத்திச்சென்று 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய பெண்ணையும் அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர். சூது கவ்வும் சினிமா பட பாணியில் நடத்தப்பட்ட கடத்தல் சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் முகமது மீரான் லெப்பை. இவரது 15 வயது மகள் சென்னை நுங்கம்பாக்கம் பைக்கிராப்ட்ஸ் கார்டனில் இயங்கிவரும் கிரசன்ட் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயாரின் செல்போன் வாட்ஸ் அப்பிற்கு மகளின் புகைப்படத்தை அனுப்பிய பெண் ஒருவர், அவரை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மகளை கடத்தி வைத்திருப்பதாக கூறியதோடு, 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

இதற்கிடையில் மாணவியை பள்ளியில் இருந்து அழைத்து வரச்சென்ற ஓட்டுநர் கணேசனோ, மீரான் லெப்பையை தொடர்புகொண்டு பள்ளியில் இருந்து யாரோ உங்கள் மகளை அழைத்துச் சென்று விட்டார்கள் என கூறியுள்ளார்.

தனது மகள் கடத்தப்பட்டு இருப்பது உண்மைதான் என தெரிந்துகொண்ட அவர் உடனடியாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விரைந்து அதிகாரிகளிடம் புகார் அளித்தார். உடனடியாக தனிப்படை அமைத்து மாணவியை மீட்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். மாணவியை கடத்தி வைத்து பணம் கேட்ட பெண்ணிடம் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை பேச்சு கொடுக்க வைத்து 10 லட்ச ரூபாய் தற்போது இல்லை கூறி பேரம் பேச வைத்தனர். இறுதியில் இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக பேசிய நிலையில் ஒப்புக் கொண்ட அந்த பெண் வடபழனி நூறடி சாலையில் உள்ள மார்டன் டூல்ஸ் ஹார்டுவேர்ஸ் கடையில் இருக்கும் நபரிடம் பணத்தை கொடுத்து விடும்படியும் பணத்தை கொடுத்து விட்டு செல்போனில் அழைத்தால் மாணவி எங்கிருக்கிறார் என தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அதேபோல் சிறிது நேரத்தில் பணத்தை கொடுத்து விட்டதாக கூறிய பிறகு, பணம் கொடுத்த இடத்திற்கு அவருடன் போலீஸ் யாரும் வரவில்லை என்பதை கேட்டு தெரிந்து கொண்ட அந்த பெண், மாணவியை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை வாசலில் விட்டுவிட்டு சென்றுள்ளார் . அங்கு நின்ற மாணவியை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

இந்த நிலையில் ஹார்டுவேர்ஸ் கடையை சாதாராண உடையில் போலீசார் கண்காணித்து வந்தனர்.

சிறிது நேரத்தில் பர்தா அணிந்த பெண் ஒருவர் அந்த மார்டன் டூல்ஸ் ஹார்டுவேர்ஸ் கடைக்கு வந்தார். அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தபோது அவர் தான் மாணவியை கடத்திவைத்து மிரடிய மோசினா பர்வீன் என்பது தெரியவந்தது. மாணவியை மீட்க கொடுக்கப்பட்ட பணத்தை கைப்பற்றிய போலிசார் அந்த பெண்ணையும் பணத்தை வைத்திருந்த கடையின் உரிமையாளர் இஜாஸ் அகம்மது என்பவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. சென்னை இராயப்பேட்டை ஜானி ஜாஹாகான் தெருவைச் சேர்ந்த எம்.ஏ ஆங்கிலம் பட்டதாரியான மோசினா பர்வீன், குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதற்காக இராயப்பேட்டை பகுதியில் நகை கடை நடத்தி வரும், பூர்ணம் சவுத்ரி என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கொரோனா காலகட்டத்தில் பிளே ஸ்கூல் தொடங்க முடியாமல் நஷ்டம் ஏற்பட பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் பணம் கொடுத்த பூர்ணம் சவுத்ரி ஏப்ரல் 6ஆம் தேதி புதன் கிழமை இறுதிக்கெடு விதித்து, பணம் கொடுக்கவில்லை என்றால் காவல்நிலையத்தில் மோசடி புகார் அளிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் என்ன செய்வது என யோசித்த மோசினாவுக்கு, செல்வந்தரான தனது தூரத்து உறவினர்களின் 2 மகள்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிரசண்ட் மெட்ரிக் பள்ளியில் படிப்பது நினைவுக்கு வந்துள்ளது. அதில் ஒரு மாணவியை கடத்தி உறவினர்களிடம் பணம் பறிக்கலாம் என திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, புதன்கிழமை மதியம் 1.30 மணி அளவில் கிரசண்ட் பள்ளிக்குச் சென்ற மோஸினா பர்வின் தனது உறவினரின் மகள் குறித்து விசாரிக்க, அவர் பள்ளிக்கு வரவில்லை என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

இதனால் தனது கடத்தல் திட்டம் கலைந்துவிட்டதை நினைத்து திரும்பிய போது தனியாக ஒரு மாணவி வகுப்பு முடிந்து வளாகத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அவர் அவரிடம் நைசாக பேச்சுக் கொடுத்து, தன்னை தாயாரின் தோழி என மாணவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு உனது தாயார் உன்னை அழைத்து வரச்சொன்னார் என ஏமாற்றி அந்த மாணவியை கூட்டிக் கொண்டு முதலில் அம்பா ஸ்கை வாக் மாலுக்கும், பின்னர் வடபழனி ஃபோரம் மாலுக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையே அந்த மாணவியின் செல்போனில் இருந்து அவரது குடும்பத்தினர் செல்போன் எண்ணை எடுத்து மாணவியை கடத்தி விட்டதாக மாணவிக்கே தெரியாமல் மிரட்டி பணம் கேட்டதாக தனது வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டுள்ளார் மோசினா பர்வீன்... இந்த கடத்தல் சம்பவத்தை சூது கவ்வும் சினிமா பட பாணியில் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் பள்ளிக்கு குழந்தைகளை அழைக்க வரும் நபர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு உரிய அடையாள அட்டை கொடுத்திருந்தால் இந்த கடத்தல் சம்பவம் நடந்திருக்காது என்று சுட்டிக்காட்டும் போலீசார் வெளிநபர்கள் வந்தால் பள்ளி நிர்வாகம் மாணவ மாணவிகளை அனுப்பக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
பாலிமர் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணக்குமா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments