காங் பிரமுகர் கொலை.. தீரன் பட நிஜ கொள்ளையன் 15 வருடம் கழித்து கைது.. சென்னையில் பதுங்கி சதிவேலை.!

0 1615

முன்னாள் அமைச்சர் சுதர்சனம், மற்றும் சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த  பவாரியா கொள்ளை ஜெயில்தார் சிங்கை சேலம் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். தலைப்பாகையுடன் சென்னையில் பதுங்கி இருந்த தீரன் சினிமாவின், நிஜ திகில் கொள்ளையன்போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட குகை பகுதியை சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த இவர் சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் அருகே நிலம் வாங்கி பெரிய பங்களா ஒன்று கட்டி அங்கு குடியேறினார்.

கடந்த 2002ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அதிகாலை முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று தாளமுத்து நடராஜனின் பங்களாவிற்குள் புகுந்தது .அவர் வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு மயக்க பிஸ்கட்டை கொடுத்து மயக்கம் அடைய செய்ததோடு, தடுக்க வந்த காவலாளி கோபால் என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு பங்களாவிற்குள் புகுந்தது .

தாளமுத்து நடராஜன் தனது துப்பாக்கியை எடுத்து வந்து கொள்ளையர்களை கட்டுப்படுத்த நினைத்த போது , அந்த கொடூர கொள்ளை கும்பல் தாளமுத்து நடராஜனையும் சுட்டுக் கொன்றனர்.

பின்னர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த சுமார் 200 பவுன் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர் . 20 வருடங்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த இந்த கொலை, கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதே கும்பல் 2005 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தின் வீடு புகுந்து அவரை கொலை செய்து அவரது வீட்டிலும் நகைக்கொள்ளையில் ஈடுபட்டது.

அடுத்தடுத்து 24 சம்பவங்களால் தமிழகத்தை அதிரவைத்த இந்த கொடூர கொள்ளை கும்பலை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அப்போது வடக்கு மண்டல ஐஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீசார் , இது பவாரியா கொள்ளை கும்பல் என்று அடையாளம் கண்டு, இந்த கும்பலை பிடிக்க ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, தேடுதல் வேட்டை நடத்தி ஒருவனை சுட்டு கொன்றுவிட்டு கொள்ளை கும்பல் தலைவன் ஓம் பிரகாஷ், அசோக் , ராகேஷ், பீனாதேவி, ஓம் பிரகாஷின் மருமகனான ஜெயில்தார்சிங் , பப்லு, சந்து ஆகிய 7 பேரை கைது செய்தனர் .

கொள்ளையடிக்கப்பட்ட 1300 சவரன் நகைகள் அனைத்தையும் கொள்ளையர்கள் விற்றுவிட்டதாக கூறிய போலீசாரால் , கொள்ளைக்கு பயன்படுத்திய ரகசிய அறையுடன் கூடிய இரு லாரிகளை மட்டுமே பறிமுதல் செய்ய முடிந்தது. இந்த கொடூர சம்பவங்களின் அடைப்படையில் தான் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் எடுக்கப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட 7 பேரில் ஜெயில்தார்சிங், அவரது மனைவி பீனாதேவி, சந்து, பப்லு ஆகிய 4 பேர் ஜாமீனில் வெளியில் வந்து தலைமறைவாகி விட்டனர். சுதர்சனம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஓம்பிரகாஷ் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தலைமறைவான ஜெயில்தார்சிங்கை பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் கடந்த 15 வருடங்களாக தேடி வந்தனர்.

கொள்ளையன் ஜெயில்தார் சிங்கிற்கு , சேலம் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கிலும் தொடர்பு உள்ளதால் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். தீவிர தேடுதல் வேட்டை நடத்திய அன்னதானப்பட்டி போலீசார் , ஜெயில்தார் சிங்கை சென்னை தேனாம்பேட்டையில் வைத்து கைது செய்தனர். ஜெயில் தார்சிங் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

இதனால் தாளமுத்து நடராஜன் வழக்கு வருகிற மே மாதம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது . தலைமறைவாக உள்ள பீனா தேவி, சந்து, பப்லு ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் பதுங்கி இருந்த ஜெயில்தார் சிங் என்ன விதமான சதி திட்டத்துடன்தங்கி இருந்தான் என்பது அவனை காவலில் எடுத்து விசாரித்தால் தெரியவரும் என்று கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments