ஐட்ஜ் அய்யா வீட்டில் சாவகாசமா சாப்பிட்டு தங்க வைர நகை கொள்ளை.. சைக்கிளால் சிக்கிய நேபாளிஸ்.!

0 3980

சென்னையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் பூட்டப்பட்ட வீட்டிற்குள் புகுந்து மூன்று நாட்கள் குடியும் கும்மாளமுமாக குடித்தனம் நடத்தியதோடு, தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிச்சென்ற நேபாளத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஞானப்பிரகாசம். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி ஏ.எச் பிளாக் பகுதியில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. வயது முதிர்வின் காரணமாக பூந்தமல்லியில் உள்ள தனது மகனான, வழக்கறிஞர் விவேகானந்தன் வீட்டில் வசித்து வருகிறார்.

அண்ணாநகரில் உள்ள வீட்டை வாரம் ஒரு முறை அல்லது இரு முறை நேரில் வந்து பார்த்து விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த மாதம் 29 -ம் தேதி வீட்டை வந்து பார்க்க வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பல லட்சம் மதிப்புடைய தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அண்ணா நகர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் நேரில் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டிற்கு வெளியில் இருந்த சிசிடிவி கேமரா இணைப்பு 22-ஆம் தேதியோடு துண்டிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அன்றைய தினம் இரவு ஒரு கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைந்ததும் பின்னர் சிசிடிவி இணைப்பை துண்டித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

அன்றைய தினம் கொள்ளையர்களில் ஒருவன் சைக்கிளுடன் வீட்டின் வளாகத்திற்குள் வந்தது பதிவாகியிருந்தது. அதன்படி அந்த பகுதியில் இந்த அடையாளத்துடன் சைக்கிளில் சென்ற நபர்கள் யார் என அண்ணாநகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு இரண்டு நபர்கள் இரவு நேரத்தில் நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 15 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், செனாய் நகரில் புபேந்திரன் என்ற நேபாளி ஒருவரை பிடித்தனர்.

கொள்ளை நடந்த இடத்தில் பயன்டுத்தப்பட்ட சைக்கிள் அவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது. அவரது வீட்டில் சோதனை செய்ததில் ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் கொள்ளையடித்த சில பொருட்கள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில் அரும்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த லாலு என்ற நபரையும் கைது செய்தனர்.

விசாரணையில் கொள்ளையடித்த நகை பணத்துடன் இரு கொள்ளையர்கள் ஹைதராபாத் சென்று அப்படியே நேபாளம் தப்பிச் செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. நேபாள நாட்டிற்கு சென்று விட்டால் அதன் பிறகு கொள்ளையடித்த பொருட்களை மீட்க முடியாது என்பதால் தனிப்படை போலீசார் துரிதமாக விசாரணை நடத்தி கொள்ளை கும்பலை தப்பிச் செல்லாமல் ஹைதராபாத்தில் வைத்தே இருவரையும் கைது செய்தனர்.

அரும்பாக்கத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த கொள்ளையன் லாலு, அண்ணா நகர் பகுதிக்கு கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் தனக்கு தெரிந்த நேபாள நாட்டு நபர்களை சந்திக்க செல்லும் பொழுதெல்லாம் பூட்டப்பட்ட நீதிபதியின் வீட்டை நோட்டமிட்டு சென்றுள்ளான். அங்கு ஆட்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்டு 3 நாட்களாக அந்த வீட்டிற்குள்ளேயே முகாமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

22-ஆம் தேதி இரவு வீட்டிற்குள் புகுந்து நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்ற நிலையில் , அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு, மறுநாளும் வீட்டுக்குள் புகுந்து வெளியிலிருந்து வாங்கி வந்த மதுபானம் மற்றும் உணவு பொருட்களை வீட்டிற்குள் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அங்கேயே படுத்து உறங்கியுள்ளனர்.

அதிகாலை அங்கிருந்து தப்பிய கொள்ளையர்கள் மூன்றாவது நாளாக அந்த வீட்டிற்குள் நுழைந்து வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் மொத்தமாக கொள்ளை அடித்து சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணேஷ் அதிகாரி, சந்தோஷ் பட்ராய் நேபாள நாட்டைச் சேர்ந்த நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அண்ணாநகர் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments