ஏய்ன்னா… எப்படி ? உங்க வீட்டுல ஆடு மாடா மேய்க்கிறோம்.. தவுளத் எஸ்.ஐ க்கு தரமான பதில் அடி.!
திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் போலீஸ் சோதனைச் சாவடியில் உண்ட மயக்கத்தில் அமர்ந்திருந்த உதவி ஆய்வாளர் ஒருவர், ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி வசூலில் ஈடுபட்ட போது ஒரு ஓட்டுனரை ஒருமையில் அழைத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஓட்டுனரின் சுயமரியாதைக் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசி விரட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் சோதனை சாவடியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஒருவர் மதிய வேளையில் உணவருந்திய மயக்கத்தில் தனது இருக்கையில் அமர்ந்து இருக்க கையில் அபராத மெசினை கையில் வைத்திருந்த போலீஸ் காரர் ஒருவர் ஒவ்வொரு வண்டியாக மறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டார்
அப்போது சரக்கு வாகனம் ஒன்றில் ஏலக்காய் மூட்டைகளுடன் சென்றவரை மறித்து ஓட்டுனருக்கான யூனிபார்ம் சரியாக இல்லை வந்து கவனித்து விட்டு செல்லும் படி கூற அனைத்து ஆவணங்களும் தன்னிடம் சரியாக இருப்பதாக அந்த ஓட்டுனர் தெரிவித்தார்.
இதனால் எரிச்சலடைந்த காவலர், எதேச்ச அதிகாரத்துடன் ஏய் என்ற ஒற்றை வார்த்தையில் அழைத்ததால் அந்த ஓட்டுனர் சுயமரியாதை வார்த்தைகளால் வெடித்தார்.
உங்க வீட்டில் ஆடு மாடா மேய்க்கிறோம் ? ஏய்ன்னு கூப்பிடுறீங்கன்னு அவர் கேட்ட கேள்விகள் அருகில் தவுளத்தாக அமர்ந்திருந்த உதவி ஆய்வாளரை சூடாக்கியது. அவர் வழக்கம்போல ஓட்டுனரிடம் குரலை உயர்த்தினார். அவரிடமும் மரியாதையாக பேசும்படி கேட்டுக் கொண்டார் அந்த ஓட்டுனர்
இதை சற்றும் எதிர்பார்காத அந்த உதவி ஆய்வாளர் , மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் ஓட்டுனரை பார்த்து பேசியதோடு, அங்கிருந்து செல்லும் படி விரட்டினார்.
ஓட்டுனர் உடன் வந்தவர் செல்போனில் படம் பிடிப்பதை பார்த்ததும் எங்கே தாங்கள் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்து போலீஸ் காரரும் செல்போனில் படம்பிடித்தார். அப்போது தாராளமாக தன்னை படமெடுத்துக் கொள்ளுங்கள் என்று தைரியமாக அவர்கள் முன்பு நின்றார் அந்த ஓட்டுனர்
நேர்மை தைரியத்தை கொடுக்கும் என்று இந்த சம்பவத்தின் வீடியோவை லாரி மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Comments