திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.!
சென்னையில் கள்ள ஓட்டு விவகாரத்தில் திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் திமுக தொண்டர் ஒருவரை அதிமுகவினர் அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி இருந்தது. கள்ள ஓட்டு போட முயன்ற அந்த நபரை பிடித்துக் கொடுத்ததாக ஜெயக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்துக் கொடுத்தது தவறா என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்த போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
தனது கணவரை போலீசார் எங்கு அழைத்துச் சென்றனர் என்பது தெரிய வேண்டும் என்று ஜெயக்குமாரின் மனைவி தெரிவித்தார்.
அத்துமீறி காவல்துறையினர் நுழைந்து கைது செய்துள்ளதாக ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் எம்பியுமான ஜெயவர்தன் குற்றம்சாட்டினார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்
ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Comments