மடக்கி பிடித்த காளையர்.. துரத்தி அடித்த காளைகள்.!

0 3584

மதுரை மாவட்டம் பாலமேடு, திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளில் காளைகளை பிடித்த காளையர்களாலும், பிடிக்க வந்த காளையர்களை பந்தாடிய காளைகளாலும் போட்டி விறுவிறுப்பு நிறைந்து காணப்பட்டது...

பொங்கல் கொண்டாட்டத்தின் இராண்டாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் நடைபெற்ற நிலையில் தமிழகத்தின் இருவேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அரங்கேறின. மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்றன.

காலை 8 மணிக்கு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் அரசு வழிகாட்டுதல்படி போட்டி தொடங்கியது. மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டை காண மாவட்ட நிர்வாகத்தினர் அனுமதி வழங்கினர். வெளியூரிலிருந்து வந்தவர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். முதலில் வாடிவாசல் வழியாக 7 கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் பிடிக்கவில்லை.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் பங்கேற்க பதிவு செய்திருந்த 300 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் இறக்கப்பட்டனர்.

ஒரு சுற்றுக்கு 30 முதல் 40 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.காளைகளின் குணத்தை நொடியில் எடை போட்டு, அதன் திமிலை பிடித்து தழுவிய வீரர்கள் வெற்றி கண்டனர். காளைகளை இனம் காணாமல் பிடிக்க பாய்ந்த சிலர் மண்ணில் உருண்டனர்.

சில வீரர்கள் வாடிவாசலை தாண்டும் காளைகளை அடுத்த நொடியில் மடக்கி பிடித்து தமிழர்களின் கொல்லேறு தழுவதலை அட்டகாசமாக வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து காளைகளை பிடித்து பலர் பரிசுகளை தட்டிச் சென்றனர்.

ஆனால் சில நேரங்களில் காளைகள் தங்களின் அசாத்திய திறனை வெளிக்காட்டி வீரர்களை விரட்டி எடுத்தன. சில முரட்டுக்காளைகள் களத்தில் நின்று விளையாடின. பிடிக்க வந்த அத்தனை பேரையும் துளிகூட நெருங்கவிடாமல் சில காளைகள் சீற்றம் காட்டின.

போட்டியில் பங்கேற்று 21 காளைகளை பிடித்த பிரபாகரனுக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சார்பில் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. 9 காளைகளை பிடித்த மதுரைமேட்டுப் பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜாவுக்கு இரண்டாம் பரிசும்,5 காளைகளை பிடித்த குருவித்துறையைச் சேர்ந்த கார்த்திக் ராஜாவுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.

சிறந்த காளையின் உரிமையாளரான சிவகங்கை மாவட்டம் புலியூரைச் சேர்ந்த ஜெகதீசுவரனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளை உரிமையாளருக்கு சமூக ஆர்வலர் பொன்குமார் சார்பில் காங்கேயம் மயிலை பசு மற்றும் கிடாரி கன்று குட்டி வழங்கப்பட்டது.

இதே போன்று திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 600 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காலை 8 மணிக்கு போட்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்தார்.

முதன்முதலாக முனியாண்டவர் கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு போட்டியில் பங்கேற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமில்களை பிடித்து அடக்கினர். ஒருசில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடியது.முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை ஒன்று வீரர்களை விரட்டி, விரட்டி எடுத்தது. இதுபோல சில காளைகளால் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிப்பாக காட்சி அளித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments