தமிழக கிராமங்களில் இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை கோலாகலம்

0 3602

தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் வீடுகள்தோறும் மாடுகளை அலங்கரித்து, பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.

உழவர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு உறுதுணையாக விவசாயிகளின் குடும்பத்தில் ஐக்கியமாகி விட்டவை கால்நடைகள். உழவுக்கு உதவும் மாடுகளுக்கும் பால் சுரக்கும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

வீடுகளில் உள்ள பசுக்கள் மற்றும் காளைகளை நீராட்டி அலங்கரிப்பதுடன், அவற்றுக்கு பொங்கலிட்டு வழிபடுகின்றனர். அவற்றுக்கு பொங்கலும், பழங்களும் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர். மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி மணியைக் கட்டிவிட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்வது வழக்கம்.

மாட்டுப் பொங்கலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் களைகட்டியுள்ளன. மாட்டுத் தொழுவங்களும், உழவுக் கருவிகளும் சுத்தம் செய்யப்பட்டு பூஜைக்கு தயாராக உள்ளன. மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகள் மூலம் தமிழர்களின் வீரத்துடன் மாடுகள் மீதான மனிதர்களின் பாசமும் இணைந்திருப்பதுதான் பொங்கலின் சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

சேலம் கோரிமேடு மற்றும் கன்னங்குறிச்சி, சின்னகொல்லப்பட்டி, செட்டிச்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் மாட்டுப் பொங்கலை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடினர். அதிகாலையில் மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பின்னர் விவசாய தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இதையடுத்து தங்கள் கால்நடைத் தோழனுக்கு வாழைப்பழம் மற்றும் பொங்கலை விவசாயிகள் பாசத்துடன் ஊட்டிவிட்டு மகிழ்ந்தனர்.

தூத்துக்குடியில் வீடுகள் மற்றும் கோசாலைகளில் இன்று மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தாங்கள் வளர்க்கும் மாடுகளை காலையிலேயே குளிப்பாட்டி, மாலை, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்தனர். பின்னர் பானையில் பொங்கலிட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர் இந்த மாட்டுப் பொங்கல் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள கோ சாலைக்கு வந்திருந்த பொதுமக்கள், பசுக்களை வணங்கிச் சென்றனர். காஞ்சி சங்கரமடம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் இந்த கோ சாலையில் 120 பசுக்கள், கன்றுகள் இருக்கின்றன. இந்த நிலையில், மாட்டுப் பொங்கலை ஒட்டி, அதிகாலை முதலே அங்கு வந்த பக்தர்கள், பசுக்களுக்கு அருகம்புல், அகத்தி கீரை, பழங்கள், சர்க்கரை பொங்கலை கொடுத்து வணங்கி வழிபட்டுச் சென்றனர். 

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு சுமார் ஆயிரம் கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள் மற்றும் இனிப்பு வகைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஒதுவார்கள் திருமுறை ஒத, பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.வழக்கமாக 108 பசு மாடுகளை அலங்காரம் செய்து நடத்தப்படும் கோ பூஜை, கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் ஒரேயொரு பசு கன்றுவுக்கு மட்டும் மாலையிட்டு சந்தனம், குங்குமம் பூசி தீபாராதனை காட்டி நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளாச்சிவிளை, தாழக்குடி  உள்ளிட்ட கிராமப்பகுதிகளில், மாடுகளுக்கு மாலைகள் அணிவித்து தலைப்பாகை கட்டி, அவற்றை கடவுளாக வணங்கி மாட்டுப் பொங்கலை உற்சாகமாக விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர்.  கொரோனா ஊரடங்கு நெறிமுறைகள் காரணமாக மாட்டு வண்டி போட்டிகள், பொது இடங்களில் பசு மாடுகளை கொண்டு வந்து மாட்டு பொங்கல் நடத்துவது, போன்ற அனைத்து நிகழ்சிகளும் இந்த முறை ரத்து செய்யபட்டு, வீடுகளிலும் மாட்டு தொழுவங்களில் மட்டுமே மாட்டு பொங்கலை விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments