விஜயலெட்சுமி அளித்த மரண வாக்குமூலம்..! கைதாகிறார் ஹரி ... தூசி தட்டப்பட்ட வழக்கு.!
சீமானுடன் சேர்ந்து நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கு தொடர்பாக, ஹரியை பெங்களூரு சிறையில் வைத்து கைது செய்ய திருவான்மியூர் போலீசார் அனுமதி கேட்டுள்ளனர். ஒரு காலத்தில் நடமாடும் நகைக்கடையாக வலம் வந்தவர் சிறைப்பறவையாகி தவிக்கும் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தமிழக அரசியல் களத்தில் ஒரு காலத்தில் கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்தபடி வலம் வந்த ஹரி, மோசடி வழக்கில் சிக்கி பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் கைதியாக உள்ளார்..!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு 36 ஆயிரம் வாக்குகள் பெற்ற ஹரியின் போதாதகாலம், தேர்தல் முடிவு வெளியாவதற்குள்ளாகவே மோசடி வழக்கில் பொங்களூரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
முறையாக வருமானவரி செலுத்தியவர் என்பதால் அவருக்கு சிறையில் விஐபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு பெங்களூரு பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த மோசடி வழக்கில் இருந்து வெளியே வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த ஹரிக்கு, நடிகை விஜயலெட்சுமியால் புதிய சிக்கல் உருவாகி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ந்தேதி அதிக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிய நடிகை விஜயலெட்சுமியிடம், எழும்பூர் மெட்ரோபாலிட்டன் நீதிமன்ற நீதிபதி நேரடியாக சென்று வாக்குமூலம் பெற்றார்.
அவரிடம் அளித்த வாக்குமூலத்தில் சினிமா இயக்குனர் சீமான், சதா, ஹரி ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வன்கொடுமை செய்ததாக விஜயலெட்சுமி தெரிவித்திருந்தார். அதன் பேரில் சீமான், சதா, ஹரி ஆகிய 3 பேர் மீதும் திருவான்மியூர் காவல்துறையினர் 509, 506(2) பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
விஜயலெட்சுமி உயிர் பிழைத்துக் கொண்டதால் அந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமலும், புகாரின் பேரில் நடவடிக்கை ஏதும் எடுக்காமலும் அப்போது போலீசார் வழக்கை கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்12 ந்தேதி தமிழகத்தில் இருந்து பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்துக்கு திருவான்மியூர் போலீசார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். விஜயலெட்சுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் 3 வது குற்றவாளியாக போலீசாரால் சேர்க்கப்பட்டுள்ள ஹரியை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
ஹரியைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய சீமான், சதா ஆகியோர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நகை நட்டெல்லாம் போட்டு ஜபர்தஸ்சாக ஊருக்குள் வலம் வந்த ஹரி, விஐபி அந்தஸ்தில் சிறையில் இருந்தாலும், போலீசாரின் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளால் வெளியில் வர இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
Comments