துள்ளிய காளைகள்.. துடிப்புடன் அடக்கிய காளையர்.!

0 6406

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காலை தொடங்கி மாலை வரை உற்சாகத்துடன் நடைபெற்றது. 

மதுரை அவனியாபுரத்தில் ஆண்டு தோறும் தைப்பொங்கல் நன்னாளில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது வழக்கம். இதே போல இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை மதுரை மாவட்ட நிர்வாகமே நடத்தியது. அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

காலை 7.30 மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில் முதன்முதலில் அவனியாபுரம் ஊர் காளை அவிழ்த்து விடப்பட்டது.
இதை தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. வாடி வாசலை விட்டு சீறி பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் போட்டி, போட்டுக் கொண்டு களத்தில் இறங்கினார்.

கடந்த சில ஆண்டுகளாகவே கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இந்த முறை கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன.

2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். இதே போன காளைகளுடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வாடி வாசலை கடந்து வரும் காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும், தொடர்ந்து மூன்று முறை காளை துள்ளும் வரை அதன் திமிலை மட்டுமே பிடித்தபடி இருப்போரே வெற்றி பெற்றவர் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டி நடைபெற்றது.

திமில் உயர்ந்தி வந்த காளைகளை போட்டியாளர்கள் வீரத்துடன் மடக்கி பிடித்தனர். சில நேரங்களை காளையர்களை காளைகள் வென்றன. வெற்றி சிலநேரம் காளைகள் பக்கமும், சிலநேரம் வீரர்கள் பக்கமும் என மாறி,மாறி வந்தது.

சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. வர்ணையாளர்களின் வர்ணிப்பை போல, தொட்டுப்பார் என மாடு பிடிப்போருக்கு சில காளைகள் சவால் விட்டன. சில காளைகள் தம்மை தொட்டோரை தூக்கி, தூக்கி பந்தாடின. சில காளைகள் யாரையும் நெருங்கவே விடாமல் சீற்றம் காட்டின.

காளைகளுக்கு ஈடுகொடுக்கும் வீரம் தமிழர்களுக்கு உண்டு என்பதை களத்தில் இருந்த மாடு பிடி வீர ர்கள் தொடர்ந்து வெளிக்காட்டினர். சீறும் காளைகளை வெற்றுக் கரங்களால் தொட்டு, தழுவி ஏறு தழுவுதல் எங்கள் பாட்டன் சொத்து என்பதை பலரும் நிரூபித்தனர்.

காலை 7.30 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை வரை நீடித்தது. போட்டியின் விறுவிறுப்பிற்கு அதன் வர்ணனையாளர்கள் மேலும் விறுவிறுப்பு ஏற்றினர்.மதுரை தமிழில் போட்டியை அங்குலம், அங்குலமாக வர்ணித்து அசத்தினர். போட்டியில் அதிக காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாமல் தீரம் காட்டிய காளைகளுக்கான பரிசை உரிமையாளர்கள் பெற்றனர்.

இதில் 24 காளைகளை பிடித்த கார்த்திக்கிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது, 19 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தை பிடித்த முருகனுக்கு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது, 11 காளைகளை அடக்கிய பரத்திற்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது. சிறந்த மாடுகளுக்கான பரிசுகளை உரிமையாளர்கள் பெற்றனர். இதில் முதல் பரிசை மணப்பாறையைச் சேர்ந்த தேவசகாயம் என்பவரும், இரண்டாவது காளைக்கான பரிசை ராமுவும், மூன்றாவது காளைக்கான பரிசை சதீஷ் என்பவரும் பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments