சந்தேகத்தால் மனைவி கொலை.. 17 ஆண்டு திருமண வாழ்க்கையில் புரிதல் இல்லாததால் விபரீதம்

0 5911

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன், தானும் விஷம் குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சந்தேக சைக்கோவால் குடும்பம் சிதைந்து 3 பிள்ளைகளும் நிர்கதியாகும் நிலைக்கு தள்ளப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.... 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுர் அருகே முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லோகநாதன் - பேபி தம்பதியினர். திருமணமாகி 17ஆண்டுகள் ஆன இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருக்கின்றனர். பிள்ளைகள் மூவரும் பாட்டி வீட்டில் தங்கியிருந்து பள்ளியில் பயின்று வரும் நிலையில், லோகநாதனும், பேபியும் சென்னைக்கு அருகே செங்கல் சேம்பரில் தங்கி பணி செய்து வந்தனர்.

பொங்கல் பண்டிகைக்காக ஒரு வாரத்திற்கு முன் சொந்த ஊரான முதலூருக்கு இருவரும் வந்திருந்த நிலையில், நேற்றிரவு மதுவில் பால்டாயிலை கலந்து குடித்த லோகநாதன், தூக்கு போட முயற்சித்திருக்கிறார். அதற்குள் பிள்ளைகள் பார்த்து அழுது ஊரை கூட்டியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், லோகநாதன் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அடிக்கடி மனைவியை சந்தேகக் கண்ணுடன் பார்த்து சண்டையிட்டு வந்த லோகநாதன், மற்ற ஆண்களுடன் சேர்த்து வைத்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால், மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக, அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறான் லோகநாதன். சம்பவத்தன்று, பேபியை மாடிக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்த லோகநாதன், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கழுத்தை அறுத்ததோடு, நெஞ்சு, வயிற்றை கிழித்து குடலை உருவி தனியாக எடுத்து வைத்திருந்தாக கூறப்படுகிறது.

மனைவியை கொலை செய்து மாடியில் போட்டுவிட்டு, வீட்டுக்குள் சென்று மதுவில் பால்டாயில் கலந்து குடித்ததோடு, தூக்குப் போட சென்ற போது தான் பிள்ளைகள் பார்த்து கூச்சலிட்டிருக்கின்றனர். லோகநாதன் கடிதத்தில் எழுதி வைத்திருந்த நபரை பிடித்து விசாரித்த போது, அந்த நபருக்கும், பேபிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறும் போலீசார், உறவினர்களிடம் விசாரித்தவரையில் லோகநாதன் தான் தேவையின்றி மனைவி மீது அடிக்கடி சந்தேகப்பட்டு சண்டையிடுவார் என்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

கணவனின் சந்தேக தீயில் கருகி மனைவி உயிரிழந்த நிலையில், குழந்தைகள் மூன்று பேரும் நிர்கதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments