மதுபோதையில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட சரக்கு வாகனம்.. அடுத்தடுத்து 2 பைக்குகள், கார் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி.!
செங்கல்பட்டில் மதுபோதையில் அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட சரக்கு வாகனம், 2பைக்குகள், கார் மீது அடுத்தடுத்து நேருக்கு நேர் மோதிய கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஓட்டுநர் வெற்றி கரிகாலன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்தியன் வங்கி அருகே வந்த போது, அதிவேகமாக கண்மூடித்தமாக ஓட்டி வந்ததால், கட்டுப்பாடு இல்லாமல் எதிரே வந்த பைக் மீது மோதி, பைக்கில் வந்தவரை தூக்கிவீசியது.
அத்தோடு, கார் மீதும் மோதிய சரக்கு வாகனம், சாலையோரம் பைக்கில் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது. இதில் ஒருவர் நூலிழையில் தப்பிய நிலையில் மற்றொருவர் சரக்கு வாகனத்திற்கு அடியில் சிக்கி இழுத்துக் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னரும் கண்மூடித்தனமாக சென்ற சரக்கு வாகனம், மின்கம்பத்தில் மோதி நின்ற நிலையில், விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தப்பியோட முயன்ற சரக்கு வாகன ஓட்டுநரை பிடித்து தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Comments