தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் - தமிழக அரசு

0 6594

தமிழ்நாட்டில், பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 200ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மூக்கு கீழே மாஸ்க் அணிந்தாலும், அபராதம் விதிக்கப்படும் என, தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 88 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து பொது சுகாதார சட்டத்தின் கீழ் 200ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்கும் வகையில், மாஸ்க் அணியாதவர்களுக்கான அபராத தொகை 200ரூபாயில் இருந்து 500ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான சட்டத் திருத்திற்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், அரசு துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது முதல் தற்போது வரை முகக்கவசம் அணியாத 50 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு சுமார் 105 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொது இடங்களில் கொரோனா கால கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், வாய், மூக்கு ஆகியவை மூடியிருக்கும்படி முகக்கவசத்தை முழுமையாக அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கழுத்திலும், மூக்குக்கு கீழும் முகக்கவசத்தை போடுவது போன்ற செயல்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments