கோவில்கள் அடைப்பால் அலைமோதும் கூட்டம்.. பிரசாதமாக கொரோனா..! இதற்கு யார் பொறுப்பு..?

0 7805
கோவில்கள் அடைப்பால் அலைமோதும் கூட்டம்.. பிரசாதமாக கொரோனா..! இதற்கு யார் பொறுப்பு..?

பொங்கலையொட்டி 5  நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தைப்பூச விரதம் இருந்த பக்தர்களால் பல்வேறு கோவில்களில் கூட்டம் அலைமோதியது. 

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் நாளை முதல் 18 ந்தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தைப்பூசம் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்த செல்லும் பக்தர்களால் பல கோவில்களில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

குறிப்பாக அண்மையில் மேல்வருத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு பேருந்தில் கர்நாடகா திரும்பிய 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், மேல்மருவத்தூரில் நேற்று பெருங்கூட்டமாக பக்தர்கள் திரண்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

கோவிலுக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தி உரிய முறையில் வரிசைப்படுத்தி அனுப்பி வைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் பக்தர்கள் முககவசம் சமூக இடைவெளியை மறந்து கொரோனா குறித்த விழிப்புணர்வு இன்றி வெள்ளம் போல திரண்டனர்.

அதே போல திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் இருக்கின்ற நாட்களில் தங்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக குடும்பத்துடன் பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நெருக்கி அடித்துக் கொண்டு பேருந்து பயணத்தை மேற்கொண்டனர்.

பேருந்துகளில் 75 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை மீறி அரசு பேருந்துகளில் கூட்டம் முண்டியடித்தது. 

திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களில் கட்டுப்பாடுகளுடன் வாடிக்கையாளர்களை அனுமதிப்பதை போல அனைத்து மத வழிபாட்டு தளங்களிலும் போதுமான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டால் ஒரே நேரத்தில் இது போல முண்டியடித்து செல்வது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும் என்றும், கோவில்களில் இருந்து ஊர் திரும்பும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்கினால் பேருந்துகளில் நெரிசல் குறையும் என்றும் கூறுகின்றனர் பக்தர்கள். அதே நேரத்தில் வழிபாட்டுத் தலங்களுக்குப் போய் கொரோனாவை பெற்றுவராமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் அறிவுறுத்தலாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments