பெண் மானை தேடி பொருளையும் பறிகொடுத்த லொகாண்டோ புள்ளிராஜா..! பறிபோன பைக்காவது வருமா ?

0 3953

சென்னையில் லொகோண்டா டேட்டிங் செயலி மூலம் ஒரு பெண்ணிடம் ஏற்கனவே, சில ஆயிரங்களை இழந்த மருந்து நிறுவன பிரதிநிதி ஒருவர், அதே பெண்ணை தேடிப்போய் தான் ஓட்டிச்சென்ற பைக்கையும், கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியையும் பறிகொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்ணாசையால் காசி தியேட்டர் வாசலில் வழிப்பறி கும்பலால் போடப்பட்ட ஸ்பெசல் மொட்டை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மருந்து நிறுவன பிரதி சுதர்சன் . 24 வயதான இவர் லோகாண்டோ என்கிற டேட்டிங் செயலி மூலம் ஒரு பெண்ணை நேரில் சந்திப்பதற்காக ஆன்லைனில் ஐந்தாயிரம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார்

அப்பொழுது சுதர்சனை செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் மிகவும் நெருக்கமாக பேசியுள்ளார். மேலும் விரைவில் நேரில் சந்திப்பதாக உறுதி அளித்துள்ளார். நேரில் ஒரு நாள் முழுவதும் தன்னுடன் பொழுதை கழிப்பதற்கு 5 ஆயிரம் ரூபாய் போதாது என ஆசையை தூண்டும் விதமாக பேசி மேலும் இரண்டு தவணையாக 18 ஆயிரம் ரூபாய் பணத்தை, சுதர்சனிடம் இருந்து அந்த பெண் கறந்துள்ளார்.

ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த இளம்பெண் கூறியபடி நேரிலும் வரவில்லை, போன் செய்தாலும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் லொகோண்டோ செயலியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்து பணத்தை திரும்ப பெற சுதர்சன் முயற்சி செய்துள்ளார். அவர்கள் பண இழப்புக்கு நிர்வாகம் பொறுப்பாகாது என்று கைகழுவியதால் ஏமாற்றத்துக்குள்ளானார் சுதர்சன்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அதே இளம்பெண்ணின் செல்போனுக்கு சுதர்சன் தொடர்பு கொண்டபோது , அந்த இளம்பெண் பேசியுள்ளார். உடனடியாக தனது பணத்தை திருப்பித்தரவில்லை யென்றால் , காவல் நிலையத்திற்கு சென்று பணமோசடி புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் சுதர்சன்.

இதையடுத்து எதிர்முனையில் பயந்தது போல பேசிய அந்தப்பெண் திங்கட்கிழமை மாலை ஈக்காட்டுத்தாங்கல் காசி திரையரங்கம் அருகே நேரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஏற்கனவே ஒரு முறை மோசடி செய்து பணத்தை பறித்த பெண் நேரில் வரச்சொல்கிறாரே என்று அந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் தனது இரு சக்கர வாகனத்தில் சுதர்ஷன் அங்கு சென்றுள்ளார் .

காசி தியேட்டர் வாசலில் கன்னிக்காக காத்திருந்த சுதர்சனை, அங்கு வந்த 4 காளையர்கள் சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்துள்ளனர். சுதர்சனை புரட்டி எடுத்து அவரது இரு சக்கர வாகனத்தையும், கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். ஏற்கனவே அந்த பெண்ணிடம் ஒரு கிட்னியை இழந்த சுதர்சன், வலியசென்று மீண்டும் ஒரு கிட்னியை பறிகொடுத்தது போன்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சுதர்சனை போனில் அழைத்த அந்த கும்பலை சேர்ந்த ஒருவன், நடந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தால் அந்த பெண் உடனான சமாச்சாரத்தை அம்பலப்படுத்துவோம் என்று மிரட்டியதோடு, இரு சக்கர வாகனமும், தங்கசங்கிலியும் தேவை என்றால் சில ஆயிரங்கள் பணத்தைக் கொடுத்துப் பெற்றுக் செல்லுமாறு மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதற்கு மேல் அந்த பெண்ணையும் இந்த கும்பலையும் நம்பி சென்றால் உண்மையிலேயே தன்னை பிடித்து கிட்னியை திருடிவிடுவார்கள் என்று அஞ்சிய சுதர்சன் பெண்ணாசையால் தன் வாழ்வில் மண்விழுந்த சோகம் குறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனிப்படை அமைத்துள்ள போலீசார், சுதர்சனை தாக்கி இரு சக்கர வாகனம் மற்றும் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற 4பேர் கொண்ட பிளாக் மெயில் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

லொகாண்டோ போன்ற டேட்டிங் இணையதளங்களில் பகிரங்கமாக நடக்கின்ற இது போன்ற சட்டவிரோத செயல்களை இரும்புக்கரம் கொண்ட தடுக்க வேண்டியது காவல்துறையினரின் கடமை, அதே நேரத்தில் ஆன்லைனில் அந்த விவகாரத்திற்காக பெண்ணை தேடிச்சென்றால் பணத்துக்கும், பொருளுக்கும் அது வேட்டு வைக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments