குழந்தையின் கை கால்கள் தன்னை போல இல்லை.. மனைவியை கொன்ற கணவன்..! தீரா சந்தேகத்தால் சிதைந்த குடும்பம்

0 4952

தனக்கு பிறந்த மகனின் கை மற்றும் கால்கள் தன்னை போல இல்லை என்ற சந்தேகத்தால், மனைவியுடன் 2 வருடமாக சண்டையிட்டு வந்த வங்கி ஊழியர் ஒருவர், தனது மனைவியை குத்திக் கொலை செய்து விட்டு கத்தியுடன் காவல் நிலைய சென்ற விபரீத சம்பவம் விருதுநகரில் அரங்கேறி உள்ளது .

விருதுநகர் NGO காலனி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் வங்கி ஊழியர் கண்ணன், இவரது மனைவி கற்பகம், இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை தொடர்ந்து வந்த நிலையில் சம்பவத்தன்று காலை மனைவி கற்பகத்தை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார் இதில் சம்பவ இடத்திலேயே கற்பகம் பரிதாபமாக பலியானார். இதையடுத்து மனைவியை கொலை செய்த கண்ணன், கத்தியுடன் விருது நகர் ஊரக காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊரக காவல் துறையினர் கொல்லப்பட்ட கற்பகத்தின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வங்கி ஊழியர் கண்ணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், மனைவியிடம் எவ்வளவு பெரிய சந்தேக பிராணியாக நடந்து கொண்டார் என்பது அம்பலமானது.

திருமணமாகி 11 வருடங்கள் கடந்தாலும் மனைவி கற்பகம் மீது அளவுக்கதிகமான அன்பு வைத்திருந்துள்ளார் கண்ணன். இந்த அன்பு நாளுக்கு நாள் அதிகமாகி தனது மனைவி தன்னை தவிர எந்த ஒரு ஆணிடமும் பேசக்கூடாது என்ற மன நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வீட்டிற்கு வரும் பால்காரருடன் பேசினால் கூட ஏன் பேசினாய் ? எதற்காக பேசினாய் ? என்ன பேசினாய் ? அதற்கு அவர் என்ன சொன்னார் ? அவரிடம் எப்படி பேசலாம் ? அவர் எப்படி உன்னிடம் பேசலாம் ? என்று வித விதமாக கேள்வி கேட்டு மனைவியை சந்தேக தீயால் சுட்டு வந்துள்ளான்.

அவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த மகன் பிறந்தது முதலே கண்ணனுக்கு மனைவி கற்பகம் மீது சந்தேகம் இன்னும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அந்த குழந்தையை கையில் எடுத்து வைத்துக் கொண்டு குழந்தை ஏன் தனது சாயலில் இல்லை என்று தொடங்கி, கண்கள் வேறு மாதிரி இருக்கின்றது. கை , கால்கள் ஏன் தன்னை போன்று உருண்டையாக இல்லை . இது என் குழந்தையே இல்லை ..! என்று மீண்டும் மீண்டும் வார்த்தையால் சுட்டு கொடுமை செய்துள்ளான் கண்ணன்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக குழந்தையின் உடலமைப்பை வீட்டிற்கு வந்து செல்லும் ஆண் நபர்களின் உருவ அமைப்புடன் ஒப்பிட்டு மனைவியை அடித்து உதைப்பதையும் வழக்கமாக்கிய கண்ணன். சம்பவத்தன்று மனைவியுடன் சண்டையிட்டு கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தன் மீது நம்பிக்கை இல்லாத கணவன் தான், மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் கொள்வான் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர் ஆரம்பத்திலேயே இரு வீட்டு பெரியவர்களும் அமர்ந்து பேசி சந்தேக பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்திருந்தால் இந்த விபரீத கொலை சம்பவம் நிகழ்ந்திருக்காது என்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments