சினிமாவில் ஹீரோ..! நிஜத்தில் வில்லன்..! போலீசுக்கே ஸ்கெட்ச்..! வாயால் சிலிப்பான திலீப்..!

0 7080
சினிமாவில் ஹீரோ..! நிஜத்தில் வில்லன்..! போலீசுக்கே ஸ்கெட்ச்..! வாயால் சிலிப்பான திலீப்..!

நடிகையை பலாத்காரம் செய்து ஆபாசப் படமெடுத்த வழக்கில் கைதாகி ஜாமீனில் இருக்கும் மலையாள நடிகர் திலீப் , வழக்கின் விசாரணை அதிகாரி உள்ளிட்ட போலீசாரை லாரியை ஏற்றி தீர்த்துக்கட்ட போட்ட சதி திட்டத்தின் ஆடியோ வெளியானதால் அவர் மீது போலீசார் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளனர். மலையாளத் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருந்து, நிஜத்தில் கைதேர்ந்த வில்லனாக மாறிய திலீப், நாவால் சிலிப்பான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

மலையாளத் திரைப்படங்களில் முன்னணி ஹீரோவாக ஜொலித்தவர் நடிகர் திலீப். தமிழில் ராஜ்ஜியம் படத்தில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் கூலிப்படையை ஏவி பிரபல நடிகை ஒருவரை காருக்குள் வைத்து பலாத்காரம் செய்து ஆபாச படமெடுத்து மிரட்டிய வழக்கில் கைதாகி நீண்ட நாட்கள் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வரும் நிலையில், சினிமாவில் ஹீரோவாக நடித்தாலும் நிஜத்தில் இவரது சிந்தனையும் செயலும் கடைந்தெடுத்த வில்லன் போல இருப்பது அண்மையில் வெளியான ஆடியோவால் அம்பலமாகி உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இயக்குனர் பால சந்திரகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திலீப்பின் பல சதித்திட்டங்கள் அம்பலமாயின. இந்த வழக்கில் பிடிவாதமாக இருந்து தன்னை சிறையில் அடைக்கக் காரணமான விசாரணை அதிகாரியான பைஜூ பவுலோசை, லாரி ஏற்றிக் கொலை செய்து விட்டு விபத்து போல சித்தரிக்க நடிகர் திலீப், அவரது சகோதரர் அனூப், உறவினர் சூரஜ் ஆகியோர் திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் அது தொடர்பாக திலீப் சிலருடன் உரையாடிய ஆடியோவும் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து விசாரணை அதிகாரி பைஜூ பலோஸ் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 15 ந்தேதி எர்ணாகுளத்தில் உள்ள தந்து வீட்டில் வைத்து மற்ற நபர்களுடன் சேர்ந்து திலீப் இந்த கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்டுள்ளது. பைஜூ பலோசஸை லாரி ஏற்றியும், தன்னை விசாரணையின் போது டார்ச்சர் செய்த காவலர்கள் சுதர்சன், ஜோஜன் சந்தியா ஆகியோர் விரைவில் அதற்குரிய தண்டனையைப் பெறுவார்கள் என்றும், குறிப்பாக தன் மீது கை வைத்த காவலர் சுதர்சனின் கையை வெட்ட வேண்டும் என்று திலீப் கூறி இருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் நடிகர் திலீப், அவரது சகோதரர் அனூப், திலீப்பின் 2 வது மனைவி காவ்யா மாதவனின் சகோதரர் சூரஜ் உள்ளிட்ட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவணந்தபுரம் மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சினிமாவில் ஜனங்களின் நாயகனாகத் தோன்றிய திலீப், நிஜத்தில் அக்மார்க் வில்லனாக கொலைக்கு சதித் திட்டம் தீட்டி இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments