"இன்னும் 3 நாள்தாங்க இருக்கு"... அரசு நிர்ணயித்துள்ள விலையை விட குறைவாக ஏலம்.. கரும்புகளோடு சேர்ந்து வாடும் விவசாயிகள்..!

0 2666
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக வெட்டப்பட்ட கரும்புகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக வெட்டப்பட்ட கரும்புகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் என அரசு நிர்ணயித்துள்ள நிலையில், 11 முதல் 13 ரூபாய் வரை மட்டுமே இடைத்தரகர்கள் ஏலம் எடுக்கின்றனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

தமிழக அரசு பொங்கல் தொகுப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறது. அந்த 21 பொருட்களில் பிரதானமாக இருக்கும் கருப்புக் கரும்புகளை அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துகொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஐயாயிரம் ஏக்கரில் கருப்புக் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. ஒரு கரும்பின் விலை 33 ரூபாய் என அரசு நிர்ணயித்த நிலையில், அவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் வெறும் 9 ரூபாய் முதல் அதிகபட்சமாக 13 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவுதுறை அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில், மீண்டும் இடைத்தரகர்களின் ஆதிக்கமே தலைதூக்கி உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

3 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை முன்பணத்தைக் கொடுத்து கரும்பை வெட்டச் சொல்லிவிட்டு இடைத்தரகர்கள் தலைமறைவாகி விட்டதாகக் கூறுகின்றனர். அவர்களை நம்பி கரும்பை வெட்டி லாரியில் ஏற்றி வைத்து 8 நாட்கள் ஆகிறது என்றும் இன்னும் பல இடங்களில் கரும்புகள் வெட்டப்படாமல் இருக்கின்றன என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க பெரும் சிரமங்களுக்கிடையே வெட்டிய கரும்புகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அப்படியே நின்றிருப்பதால், செய்வதறியாது தவித்து வருவதாக லாரி ஓட்டுநர்களும் கூறுகின்றனர்.

இதே நிலைதான் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதியிலும் காணப்படுகிறது. இந்த 3 நாட்களுக்குள் கரும்புகளை உரிய விலைக்குக் கொள்முதல் செய்ய வில்லை என்றால் பெரும் இழப்பை தாங்கள் சந்திக்க நேரிடும் என விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

விவசாயிகளின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படுவதாகவும் ஒரு சில விவசாயிகள் வெளிமாவட்ட இடைத்தரகர்களிடம் முன்பணம் பெற்று ஏமாறுகின்றனர் என்றும் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments