ஜல்லிக்கட்டு - 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி

0 3167

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஜல்லிகட்டு நிகழ்ச்சியின் போது, காளையுடன் அதன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் என 2 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், அவர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்து 2 நாட்களுக்குள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அவசியம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமலும், எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமலும் பங்கேற்க அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்து 2 நாட்களுக்குள் தொற்று இல்லை என்பதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், போட்டிகளை காண அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய தமிழக அரசு, இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், பார்வையாளர்களும் 2 டோஸ் தடுப்பூசி மற்றும் நிகழ்ச்சிக்கு 2 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்று அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், வெளியூர்களில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணையம் வழியாக காண தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments