கொரோனா நம்முடனே பயணிக்கும்... தடுப்புமுறைகள் பின்பற்றுவது அவசியம்... WHO தலைமை விஞ்ஞானி அறிவுறுத்தல்..!

0 3082
கொரோனா நம்முடனே பயணிக்கும்... தடுப்புமுறைகள் பின்பற்றுவது அவசியம்... WHO தலைமை விஞ்ஞானி அறிவுறுத்தல்..!

கொரோனா போன்ற வைரஸ்கள் கடைசி வரை நம்முடன் பயணிக்கும் எனக் குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமி நாதன், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தேவையில்லை என தெரிவித்தார்.

சென்னை திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்துத் தாவர விழிப்புணர்வுத் தோட்டம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், கொரோனா மூன்றாம் அலையை கடக்க காற்றோட்டம் இல்லாத இடம், கூட்டம் கூடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

 ஒமைக்ரான் போன்ற வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான புரிதல் ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தேவையில்லை என சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார். மேலும், ஒமைக்ரான் வைரஸ் தீவிரத்தன்மை குறைவாக தெரிந்தாலும், அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அனைவரும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்

 வயது முதிர்ந்தோர், இணை நோய்ப் பாதிப்பு இருப்பவர்கள் கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சவுமியா சுவாமிநாதன் வலியுறுத்தினார். மேலும், தற்போதைய சூழலில் தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை கட்டுப்பாட்டில் வைப்பதுடன், உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

 இனி வரும் நாட்களிலும் கொரோனா போன்ற வைரஸ்கள் மாறுபாடு ஏற்பட்டு புதிய வகை தொற்றாக மாறலாம் என எச்சரித்த சவுமியா சுவாமிநாதன், தொற்றா நோய்களைக் கண்டறியத் தமிழக அரசு கொண்டு வந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்குப் பாராட்டுக்களை தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments