காதல்...கொலை... என்கவுன்டர்...!

0 4480

செங்கல்பட்டு இரட்டை படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 ரவுடிகள், போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ரவுடிகள் இருவரும் நிகழ்த்திய இரட்டை படுகொலைக்கு பின்னணியில் காதல் விவகாரம் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது..

செங்கல்பட்டு காவல் நிலையம் அருகேயுள்ள டீக்கடையில், வியாழக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில், அப்பு கார்த்திக் என்பவர் டீக்குடிக்க வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் சரமாரியாக வெட்டியும் தலையை சிதைத்து கொலை செய்துவிட்டு தப்பியது. அடுத்த சில நிமிடங்களில் அங்குள்ள வீட்டில் டி.வி பார்த்து கொண்டிருந்த மகேஷ்குமார் என்பவரையும், அதே கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடியது.

இந்த இரட்டை கொலை தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இந்த இரட்டை கொலைகளில் தொடர்புடைய மாதவன் என்பவரும், கொலைக்கு உதவியாக நாட்டு வெடிகுண்டு தயார் செய்து கொடுத்ததாக ஜெசிகா என்ற பெண்மணியும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 2 குற்றவாளிகள், செங்கல்பட்டு அருகேயுள்ள இருங்குன்றப்பள்ளி காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த 2 குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர்கள் இருவரும் போலீசார் மீது வெடிகுண்டு வீசி தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். இதையடுத்து, தீனா என்கிற தினேஷ் மற்றும் மொய்தீன் ஆகிய 2 ரவுடிகளும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, ரவுடிகள் தாக்குதியதில் காயமடைந்த 2 போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, செங்கல்பட்டு இரட்டை கொலை சம்பவத்தின் பின்னணிக்கு காதல் விவகாரமே காரணம் என்றும், இதுதொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு முதலே இருதரப்புக்கும் இடையே மோதல் நிலவி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி தினேஷின் சகோதரி பவித்ராவை ஹரிகிருஷ்ணன் என்பவர் காதலித்ததாகவும், ஆனால் அதற்கு தினேஷ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஹரிகிருஷ்ணனுக்கு ஆதரவாக அப்பு கார்த்திக், மகேஷ் ஆகியோர், தினேஷை மிரட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ரவுடி தினேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அப்பு கார்த்திக் மற்றும் மகேஷை கொன்றதாக சொல்லப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments