சிங்கம் பட பாணியில் காஞ்சி, திருவள்ளூர் ரவுடிகளுக்கு ஸ்கெட்ச்..! எச்சரித்த காவல் அதிகாரிகள்..!

0 4604

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தொழிற்சாலைகளை மிரட்டி, இரும்புக் கழிவுகளைப் பெற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும், கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை ஒடுக்க, போலீஸ் அதிரடி  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் அனைத்து தொழிற்சாலை அதிகாரிகளையும் அழைத்து ரவுடிகளுக்கு பயந்து ஒப்பந்தம் கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நல்லவர் ஒருவரால் ஊர் முழுவதும் மழை பொழிவதாக கூறுவதுண்டு. அதே போல படப்பை குணா என்ற ரவுடி செய்த கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு சேட்டையால் திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியில் தொழிற்சாலைகளை மிரட்டி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரும்புக் கழிவுகளை எடுப்பது, செய்யாத வேலைக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெயரில் தண்டச் சம்பளத்தை மாமூலாகப் பெறுவது என வளமாக வாழ்ந்து வந்த ரவுடிகளின் வாழ்வில் இடியை இறக்கி உள்ளது.

தலைமறைவாக உள்ள ரவுடி படப்பை குணாவை, கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரையின் தனிப்படை தேடி வரும் நிலையில், குணாவுக்கு உதவிய காவல்துறையைச் சேர்ந்த 15 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். அதன்படி சுங்குவார் சத்திரம் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, எழுத்தர் ராஜேஷ் உள்ளிட்டோர் லேப்டாப் மட்டுமின்றி, லட்சக்கணக்கில் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபலமான கானா பாடகர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணத்தை அள்ளிக்கொடுத்து, தங்களைப் புகழ்ந்து, பில்டப் கொடுத்து பாடவைத்து, யூடியூப்பில் விளம்பர வீடியோ வெளியிட்டு வந்ததும் அம்பலமாகி உள்ளது.

முக்கியமாக கவுன்சிலர் தேர்தலில் வென்று, ஒன்றிய சேர்மன் தேர்தலுக்குப் போட்டியிட்ட படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, 10 பேர் கொண்ட கவுன்சிலர் குழுவில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 5 பேருக்கு தலா 50 லட்சம் ரூபாய் வீதம் பணம் கொடுக்கப்பட்டதாகவும், அவர்களில் பணம் பெற்ற 2 பேர் வாக்களிப்பைப் புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளருக்கு இணையான 4 வாக்குகளைப் பெற்று கடும் போட்டி கொடுத்த எல்லாம்மாள், இறுதியில் அதிர்ஷ்ட குலுக்கல் முறையால் தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.

சாதாரண ரவுடிக்கு லட்சக்கணக்கில் பணம் எங்கிருந்து வருகிறது என்று விசாரித்த போது, பல்வேறு தொழிற்சாலைகளில் புகுந்து மிரட்டல் விடுத்து, இரும்புக்கழிவு என்று சொல்லப்படும் ஸ்கிராப்பை மொத்தமாக எடுத்து விற்பதன் மூலம் கோடிகளில் கொழிப்பதும், அந்த பணத்தை வைத்து தனது பகுதியில் புதிய ரவுடிகளை வளர்த்துவிடுவது, கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், படப்பை குணா போல ஏரியாவுக்கு ஒருவர், இதுபோன்ற கையாட்களைச் சேர்த்துக்கொண்டு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதை அறிந்த இரு மாவட்ட காவல்துறையினர், ஸ்ரீபெரும்புதூரில் சிங்கம் பட பாணியில் ஒரு சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

இரு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொற்சாலைகளின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் பங்கேற்ற அந்த கூட்டத்தில், டிஐஜி சத்தியபிரியா, காவல் கண்காணிப்பாளர்கள் சுதாகர் மற்றும் வருண்குமார் ஆகியோர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினர்.

அதன்படி தொழிற்சாலையின் விடுதிகளில் தங்கிப் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் போதுமான இடவசதியுடன், தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதோடு, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதியை செய்து கொடுக்கும் பொருட்டு, தொழிற்சாலைகளுக்கு வெளியேவும் அதிகமான சிசிடிவி காமிராக்களை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக மிரட்டல் கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் எவரேனும் ஈடுபட்டால், அவர்களைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

வெளிமாநிலத்தவரை பணிக்கு அமர்த்தும் போது அவர்களின் உண்மை தன்மையை அறிந்து பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை, அடுத்த 30 நாட்களில் முழுவதுமாகக் களையெடுப்பதில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக களமிறங்கி கணக்கெடுத்து வரும் நிலையில், பீதியடைந்த ரவுடிகள் பலர், தங்கள் இருப்பிடத்தை தற்காலிகமாக ஆந்திரா பக்கம் மாற்றிக் கொள்ள தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments