கைதானார் "காளிமாதா" பவித்ரா.. உதார் பெண்ணின் பகீர் பின்னணி..!

0 5906

கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாகக் கொடுக்கப்பட்ட புகாரில், “காளிமாதா” பவித்ரா கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை காளியின் அவதாரம் என்று கூறி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் தன்னுடைய பக்தர்கள் என்று உதார் விட்டு வந்தவரின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

ஓ.பன்னீர் செல்வம் தன்னிடம் ஆசி பெற்றதால் தான் முதலமைச்சர் ஆனார், தன்னை வரவேற்கத் தவறியதால்தான் எடப்பாடி பழனிசாமி பதவி இழந்தார், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, நடிகர் சோனு சூட்டெல்லாம் என்கிட்ட ஆசி வாங்கியிருக்காங்க - தன்னைப் பார்க்க வருவோரிடம் "காளிமாதா" பவித்ரா அளந்துவிடும் கதைகள் இவை.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தான் தனக்கு பவித்ரா என பெயர் சூட்டியதாகக் கூறும் காளிமாதா பவித்ரா, சிறுவயதிலேயே காளியின் ஆசி பெற்று காளியின் அவதாரமாகவே தன்னை உணர்ந்ததாகக் கூறி வந்தவர். டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்ற நிகழ்ச்சியில் தன்னைக் காளியாகத் தேர்ந்தெடுத்து, ‘அகில இந்திய இந்து யுவமோட்சா தர்மாச்சார்யா’ என்ற பட்டம் கொடுத்தனர் என்றும் பவித்ரா கூறுகிறார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் கரம்பயம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட பவித்ரா தற்போது திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருகிறார். இவருக்கென்று தனியாக ஆசிரமமோ, அலுவலகமோ இல்லாத நிலையில், அவ்வப்போது முழு மேக்கப்பில் கழுத்து நிறைய நகைகளை அணிந்துகொண்டு வெளியூர் கிளம்பிச் சென்று அருளாசி வழங்குவார். இதற்காக இவர் செல்லவிருக்கும் ஊர்களில் இவரது அல்லக்கைகள் போஸ்டர்களை ஒட்டி அமர்க்களப்படுத்துவர்.

இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவயோகி என்ற சாமியார் பவித்ரா மீது போலீசில் புகாரளித்துள்ளார். கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் அமைக்க இடம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் 40 லட்ச ரூபாய் பணமும் 60 சவரன் நகைகளையும் பெற்று பவித்ரா மோசடி செய்ததாக தவயோகி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் போலீசார் காளிமாதா பவித்ராவை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

கழுத்து நிறைய நகைகளுடனும் உதட்டில் பளீர் சாயத்துடனும் காட்சியளித்து வந்த ஸ்ரீகாளிமாதா பவித்ரா, போலீஸ் வாகனத்தில் ஏறும்போது தலையில் முக்காடிட்டவாறு அவசர அவசரமாக ஏறிச் சென்றார்.

காவல் நிலையத்தில் விசாரணையின்போது, காளிமாதா அழுது புலம்பிய வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments