யூடியூப்பில் ஆபாச மிரட்டல்... அடாவடி பேபி சூர்யாவை அலேக்கா தூக்கிய போலீஸ்..! ஜெயிலுக்கு போறேன்… ஜெயிலுக்கு போறேன்....!

0 4911
யூடியூப்பில் ஆபாச மிரட்டல்... அடாவடி பேபி சூர்யாவை அலேக்கா தூக்கிய போலீஸ்..! ஜெயிலுக்கு போறேன்… ஜெயிலுக்கு போறேன்....!

வாய்க்கு வந்ததையெல்லாம் ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோவாக பதிவிட்டு வந்த அடாவடி பேபி சூர்யாவை கோவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தும் யூடியூப்பர்களுக்கு காத்திருக்கும் ஜெயில் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஒரு காலத்தில் வழக்கொழிந்த டிக்டாக்கில் அரைடவுசர் போட்டுக் கொண்டு ரவுசு செய்த சூர்யா, அது தடை செய்யப்பட்ட பின்னர் தனது காதலன் சிக்கந்தருடன் சேர்ந்து யூடியூப் பக்கம் கரை ஒதுங்கினார்

யூடியூப்பில் அவர் பதிவிடும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் காது கொடுத்து கேட்க இயலாத அளவிற்கு ஆபாச வசவுகளை கொண்டது.

அந்தவகையில் கோவை பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்த யூடியூப்பர் ஒருவரையும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குறித்தும் மிகவும் ஆபாசமாக அறுவெறுக்க தக்கவையில் பேசி கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்டு இருந்தார் சூர்யா

குழந்தையை உயிரோடு புதைத்து விடுவதாக மிரட்டிய சூர்யா ஜெயில் எல்லாம் தனக்கு சாதாரணம் என்பது போல வெற்று உதாருடன் அந்த வீடியோவை யூடியூப்பிலும் பதிவேற்றம் செய்திருந்தார்

இதையடுத்து சூர்யாவால் மிரட்டலுக்குள்ளான தம்பதியர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்தை சந்தித்து சம்பந்தப்பட்ட வீடியோ லிங்க் உடன் புகார் அளித்தனர். அவரது உத்தரவின் பேரில் கோவையில் இருந்து மதுரை விரைந்த தனிப்படை போலீசார் மதுரையில் சூர்யாவின் வீட்டிற்கு சென்று அவரையும் அவருடன் ஆபாச வீடியோ பதிவேற்றத்துக்கு துணையாக இருந்த சூர்யாவின் காதலன் சிக்கந்தரையும் அப்படியே கோழியை அமுக்குவது போல அமுக்கி கோவை அழைத்து வந்தனர்

அவர்களிடம் விசாரித்த போலீசார் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவர இயலாத 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இரண்டு முறை அடாவடி பேபி சூர்யா போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது

தமிழகத்தில் யூடியூப் சேனல் நடத்தும் சிலர் பார்வையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இது போன்று ஆபாசமாக பேசி வீடியோ பதிவிடுவது குறித்து கோவை மாவட்ட சைபர்குற்றபிரிவில் புகார் அளித்தால் உரிய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில் சென்னையில் உள்ள சைபர் குற்ற பிரிவு போலீசாரிடம் இது போன்ற வீடியோக்கள் குறித்து புகார் அளித்தால் சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி நாட்கணக்கில் புகார்தாரரை காத்திருக்க வைப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments