பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்.. முதலமைச்சர் துவக்கி வைத்தார்.!

0 4356

தமிழகத்தில், அரசி குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 20 பொருட்களும், முழு கரும்பும் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 2022-ம் ஆண்டு தை திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்களும், முழு கரும்பும் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும், ஒரு முழு கரும்பும் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

அரசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிப்போர் உட்பட மொத்தமாக 2கோடியே 15லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஆயிரத்து 296கோடி ரூபாய் செலவிடப்படுகிறது எனவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் முடிந்துள்ள நிலையில், இன்று முதல் டோக்கனில் குறிப்பிட்ட தேதி, நேரப்படி, பொதுமக்கள் நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை இடைவிடாமல் விநியோகம் செய்ய ஏதுவாக, விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையும் நியாய விலைக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments