ரயில்நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருப்பம் - ரயில் நிலைய ஊழியரின் மனைவி கைது.!

0 5738

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளையில் திடீர் திருப்பமாக ரயில் நிலைய ஊழியரே தனது மனைவியுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார், கொள்ளை போனதாகக் கூறப்பட்ட பணத்தையும் கைப்பற்றினர். 

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலையில் டிக்கெட் கவுண்ட்டர் திறக்கப்படாததால், வந்திருந்த பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பூட்டப்பட்டிருந்த கதவைத் திறந்து சென்று பார்த்த போது, டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே ஊழியர் டீக்காராம், அங்கிருந்த இருக்கையில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னை முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு விட்டு, டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்து சென்றதாகக் கூறினார்.

போலீசார் நடத்திய விசாரணையின்போது, கொள்ளை போன பணத்துடன் கொள்ளையர்கள் தனது செல்போனையும் எடுத்துச் சென்று விட்டதாக டீக்காராம் கூறினார். அலுவலகம் வந்ததும் தனது மனைவியிடம் வாட்ஸ்அப் வீடியோ கால் பேசியதாகக் கூறியதால், போலீசாரின் சந்தேகம் டீக்காராம் மீது திரும்பியது.

இதையடுத்து டீக்காராமின் மனைவி சரஸ்வதியிடம் போலீசார் விசாரித்த போது, இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். மேலும் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் அருகில் இருந்த டைடல் பார்க் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்ற பெண் ஒருவர் அதிகாலை 4 மணிக்கு வந்துவிட்டு அரை மணி நேரத்தில் திரும்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் அடையாளங்கள் டீக்காராமின் மனைவி சரஸ்வதியின் அடையாளங்களுடன் ஒத்துப் போயின. 

இதனைத் தொடர்ந்து போலீசாரின் அடுத்தடுத்த விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ஆன்லைன் சூதாட்டத்தில் நாட்டமுள்ள டீக்காராம், அதில் அதிகளவில் பணத்தை இழந்துள்ளார்.

மேலும் தனது மாதச் சம்பளத்தையும் ஆன்லைன் விளையாட்டுக்களில் தொலைத்துள்ளார். இதையடுத்து ரயில் நிலையத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கத் திட்டமிட்ட டீக்காராம், அதிகாலையில் தனது மனைவியை வரவழைத்து பணத்தை அவரிடம் எடுத்துக் கொடுத்த பின், தன்னைக் கட்டிப் போட்டு விட்டு செல்லுமாறு மனைவி சரஸ்வதியிடம் கூறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில் நிலைய ஊழியர் டீக்காராம் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆகியோரை போலீசார் கைது செய்து, பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments