தினுசு தினுசாக திருடும் கும்பல்..! இது புதுவகை திருட்டு..!

0 7634

சென்னையில் "சிம் சுவாப்" எனப்படும் நூதன முறையில் தனியார் கண் மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் இருந்து 24 லட்ச ரூபாயை திருடிய கும்பலை, மேற்கு வங்கம் சென்று சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இணைய தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தி, தினுசு தினுசாகத் திருடும் கும்பலிடமிருந்து உஷாராக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரும் உதி (Udhi) கண் மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் இருந்து கடந்த மாதம் 21ஆம் தேதி திடீரென 24 லட்ச ரூபாய் மாயமாகியுள்ளது. வங்கியில் விசாரித்தபோது, ஓடிபி எண் அனுப்பப்பட்டு, பரிவர்த்தனை முறையாக நடைபெற்று இருப்பதாகக் கூறியுள்ளனர். அது எப்படி சாத்தியம் என குழம்பிய மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகாரளித்தது. உடனடியாக விசாரணையில் இறங்கிய சென்னை சைபர் கிரைம் போலீசார், "சிம் சுவாப் மோசடி" என்ற நூதன மோசடியை கண்டுபிடித்தனர்.

ஆங்கிலத்தில் பிஷிங் (Phishing) விஷிங் (Vishing) ஸ்மிஷிங் (Smishing) என பலவகைகளில் அழைக்கப்படும் தகவல் திருட்டில் ஒருவகைதான் இந்த சிம் சுவாப் எனப்படும் திருட்டு. வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறியோ, சம்மந்தப்பட்ட எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியோ, மின்னஞ்சல் மூலமாகவோ வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை மோசடி கும்பல் திருடிக் கொள்ளும். இன்னும் சில இடங்களில் வங்கிகளில் பணிபுரியும் சில கருப்பு ஆடுகள் மூலமாகவும் வாடிக்கையாளர்களின் சுய விவரங்களை மோசடி கும்பல் பெற்றுக் கொள்ளும் என்கின்றனர் போலீசார்.

தனிப்பட்ட நபர்களின் வங்கி விபரங்கள் முதல் நிறுவனங்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் வரை விற்பதற்கு தனியாக ஒரு கும்பல் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. அப்படி தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்கள் கிடைத்தவுடன், முதல் வேலையாக வங்கிக் கணக்குடன் தொடர்புடைய சிம் கார்டு தொலைந்துவிட்டதாக சம்மந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனத்திடம் பேசி அந்த எண்ணை முடக்குவார்கள்.

தொடர்ந்து தாங்கள் சேகரித்து வைத்திருக்கும் தகவல்களைக் கொண்டு போலி ஆவணங்களை தயாரித்து, அதே எண்ணில் புதிய சிம் கார்டை வாங்கிக் கொள்வர். இதனால் வாடிக்கையாளர்களின் வங்கியிலிருந்து வரும் ஓடிபி எண் நேரடியாக திருட்டுக் கும்பலின் செல்போனுக்கு வந்துவிடும். அதன் மூலம் பரிவர்த்தனைகளை நிகழ்த்தி, சில மணி நேரத்தில் கணக்கில் இருக்கும் மொத்தப் பணத்தையும் திருட்டு கும்பல் வழித்து எடுத்து விடும் என்று கூறப்படுகிறது.

இதே பாணியில் தான் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் உதி கண் மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் இருந்த 24 லட்சம் ரூபாய் பணம் 16 வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தில், வங்கதேச எல்லை அருகே ஒரு பகுதியிலிருந்து ஏடிஎம் மூலமாக பணம் எடுத்து இருப்பதையும் வங்கிகள் மூலம் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, கடந்த 28 -ம் தேதி சென்னை சைபர் கிரைம் போலீசார் மேற்குவங்கம் விரைந்தனர். அம்மாநில காவல் துறையினர் உதவியுடன் பணம் எடுக்கப்பட்ட ஏடிஎம் மையத்தை கண்டுபிடித்தனர். அந்த மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் குறிப்பிட்ட பரிவர்த்தனையை செய்த நபர்கள் யார் என்பதை கண்டுபிடித்து மோசடி கும்பலைச் சேர்ந்த இருவரின் உருவத்தையும் அடையாளம் கண்டனர். அவர்களது புகைப்படத்தை வைத்து அந்த ஏடிஎம் மையத்தை சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வீடு வீடாகச் சென்று ஒரு நாள் முழுவதும் தேடி, ஒருவனை மடக்கினர். அவன் மூலம் அவனுடைய கூட்டாளிகள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சையந்தன் முகர்ஜி, ராகுல் ராய், ராகோன் அலிசானா, ராகேஷ் குமார் சிங் என அந்த நான்கு பேரும் சென்னை அழைத்துவரப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதன்முறையாகப் பதிவான சிம் ஸ்வாப் மோசடியில் 10 நாட்களுக்குள் வெளி மாநிலம் சென்று மோசடி கும்பலை பிடித்து வந்த சைபர்கிரைம் காவல்துறையினரை சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுமதி அளித்து பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிடிபட்ட கும்பலிடம் விசாரணை நடத்தினால்தான் இன்னும் இதுபோன்று எத்தனை சிம் ஸ்வாப் மோசடிகள் நடந்துள்ளன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்றார்.

இந்த மோசடிக் கும்பலின் தலைவன் உத்தரபிரதேசம் தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டதாகவும், அவனை பிடிக்க மற்றொரு தனிப்படை விரைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள், 150-க்கும் மேற்பட்ட வங்கி அட்டைகள், நூற்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments