தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்

தென்தமிழகக் கடலோர மாவட்டங்களில் இன்று இலேசான மழை பெய்யக்கூடும் என்றும், பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 4, 5 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஜனவரி 6, 7 ஆகிய நாட்களில் தென்தமிழகக் கடலோர மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக ராமேஸ்வரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் அப்பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Comments