அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு.!

0 2695

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து அனைத்து மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா மற்றும் ஒமைக்ரானை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக இருப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதை உறுதி செய்யவும், கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கூட்டம் சேரும் இடங்களில் முறையான தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றவா என ஆய்வு செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க தயங்க வேண்டாம் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கையாள வைப்பதே நோக்கம் எனவும், கொரோனா பாதிப்பில் கவனம் செலுத்தி, தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தோரை கண்டறிவது, தனிமைப்படுத்துவது ஆகிய முன்னெச்சரிக்கைகளையும் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியிடங்கள், வணிக வளாகங்களில் உடல் வெப்ப பரிசோதனை செய்யவும், அறிகுறி உடையோருக்கு உடனடியாக பரிசோதனை செய்யவும், பரிசோதனை செய்து முடிவுகள் வரும் வரை சம்பந்தப்பட்ட நபரை தனிமைபடுத்தலில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டுத் தனிமையில் இருப்போரை தன்னார்வலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பரிசோதனை, கண்காணிப்பு, தனிமைபடுத்துதல் ஆகியவற்றுக்கான வசதிகளை மேம்படுத்தவும், ஒரு லட்சத்து 15ஆயிரம் படுக்கைகளை தயார் நிலையில் உள்ள நிலையில், கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக 50ஆயிரம் படுக்கைகளை உருவாக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் முழு அளவில் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments