15-18வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்.!

0 2829

 

தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்.

நாட்டில் ஏற்கனவே 18வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஒமைக்ரான் பரவி வருவதை கருத்தில் கொண்டு, 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவேக்சின் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதித்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 15-18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டையிலுள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைத்தார்.

தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்த தொடங்கியுள்ளது எனவும், கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்கும் நிலையில் அதனை கண்டு மக்கள் பீதியடையாமல் உஷாராக இருக்க வேண்டும் எனவும் மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி, தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

ஒமைக்ரான் வகை தொற்று உருமாறியிருந்தாலும், டெல்டா வைரசிலிருந்து உருமாறியிருந்தாலும், நோய் தாக்க தன்மை குறைவு என வல்லுநர்கள் கூறுவதாகவும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என குடும்பத்தில் ஒருவராக கேட்டுக் கொள்வதாக கூறினார்.

தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் 33.5 லட்சம் பேர் இருக்கும் நிலையில், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. பள்ளிகளிலேயே முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, தமிழக சுகாதாரத்துறையில் 25லட்சம் டோஸ் கோவேக்சின் இருப்பு உள்ளது.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை, உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் சுகாதாரத் துறையினர் ஒருங்கிணைத்து சிறார்களுக்கு தடுப்பூசிகளை வழங்கவுள்ளன. பள்ளி அல்லது கல்லூரி அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் சம்பந்தப்பட்ட மாணவர்களின் விவரங்கள் கோவின் செயலியில் பதிவு செய்து கொரனோ தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குள் இந்த வயது பிரிவினருக்கு 100சதவீதம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments