ஒரே நேரத்தில் குவிந்த பக்தர்கள்.. நெரிசலில் சிக்கி 12 பேர் பலி.!

0 2784

ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவ தேவி ஆலயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிப் பக்தர்கள் 12 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மத்திய மாநில அரசுகள் சார்பில் 12 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கத்ரா என்னும் ஊரில் திரிகூட மலையில் வைஷ்ணவதேவி ஆலயம் உள்ளது. புத்தாண்டையொட்டி இங்கு வழிபாட்டுக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் இரவு இரண்டேகால் மணிக்கு மூன்றாவது வாயில் அருகே இரு குழுவினர் வாய்த்தகராறில் ஒருவரையொருவர் தள்ளியதாகக் கூறப்படுகிறது.

 அதையடுத்து நெரிசல் ஏற்பட்டதில் பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த கோவில் நிர்வாகம், காவல்துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த நெரிசலில் சிக்கிப் பக்தர்கள் 12 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 15 பேர் காயமடைந்ததாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வு குறித்து உள்துறை முதன்மைச் செயலர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்ததற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா பத்து இலட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு இரண்டு இலட்ச ரூபாயும் நிதியுதவி வழங்குவதாக ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இரண்டு இலட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments